நியூயார்க் : கடந்தாண்டு கத்திக்குத்தால் படுகாயம் அடைந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோய் விட்டதாகவும், ஒரு கை இயங்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, ருஷ்டியை தாக்கிய இளைஞருக்கு, 1,000 ச.மீ., நிலத்தை பரிசாக வழங்குவதாக, ஈரானைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 75. இவர் எழுதிய, ‘சாத்தானின் வேதங்கள்’ என்ற புத்தகத்தில் இஸ்லாம் மதத்தை தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது.
கடந்த 1989ல், மேற்காசிய நாடான ஈரானின் அப்போதைய தலைவர் கொமேனி, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை விதிக்கும், ‘பாத்வா’ உத்தரவு பிறப்பித்தார். ருஷ்டியை கொலை செய்பவர்களுக்கு பரிசு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, உலகம் முழுதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், இவருக்கு எச்சரிக்கை விடுத்தன. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இவர் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்டில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி பங்கேற்றார். அப்போது, கறுப்பு நிற உடை மற்றும் முகக் கவசம் அணிந்த ஒரு இளைஞர் வேகமாக மேடையில் ஏறி, சல்மான் ருஷ்டியை சரமாரியாக கத்தியால் குத்தினார். ருஷ்டிக்கு, 20 கத்திக்குத்துக்கள் விழுந்தன. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது உடல் நலம் தேறியிருந்தாலும், சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் சுத்தமாக பார்வை பறிபோய் விட்டதாகவும், ஒரு கை செயல் இழந்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, ஈரானில், ‘பாத்வா’ உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் அமைப்பின் செயலர் முகமது இஸ்மாயில் ஜரெயி கூறியதாவது:
இஸ்லாம் மதம் பற்றி அவதுாறாக சித்தரித்த சல்மான் ருஷ்டிக்கு சரியான தண்டனை கிடைத்துள்ளது. தற்போது அவர் உயிருடன் இருந்தும் பயன் இல்லை.
அவருக்கு தண்டனை விதித்த இளைஞருக்கு, 1,000 ச.மீ., நிலம் பரிசாக அளிக்கப்படும். அவர் இல்லாவிட்டால், அவரது வாரிசுக்கு இந்த நிலம் தரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சல்மான் ருஷ்டியை தாக்கியவர், அமெரிக்காவைச் சேர்ந்த ஹாதி மாதர், 24, என தெரிய வந்தது. இவர் தற்போது சிறையில் உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்