கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலமான ‘சாம்பல் புதன்’ நிகழ்வு இன்றுடன் தொடங்கியது. பெசன்ட் நகர் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடும் வகையில், 40 நாட்கள் தவக்காலமான இன்று சாம்பல் புதன் தொடங்குகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, வறியவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். இந்த நாட்களை அவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதற்காக அதிகாலையில் இருந்தே நகர் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவர்கள் பெசன்ட் நகர் தேவாலயத்தில் குவிந்தனர். விசேஷ திருப்பலியை அருட்தந்தை தொடங்கி வைத்து பைபிள் ஓத, கிறிஸ்துவ மக்கள் பாராயணம் பாடினர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில வருடங்களாக சாம்பல் புதன் நிகழ்வு பெசன்ட் நகர் தேவாலயத்தில் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மக்கள் கூட்டத்தோடு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் பெசன்ட் நகர் தவிர்த்து சாந்தோம் தேவாலயம், சின்னமலை தேவாலயம், பிராட்வே தேவாலயம் போன்ற இடங்களிலும் கிறிஸ்துவ மக்கள் சாம்பல் புதன் தினத்தை அனுசரித்து வருகின்றனர்.
சென்னை மட்டுமன்றி தமிழ்நாடு முழுக்க பல தேவாலயங்களில் இன்று தொடங்கும் சாம்பல் புதனுக்கான அனுசரிப்புகள் நடந்தன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM