கொஹிமா: நாகாலாந்து சட்டப்பேரவைக்கு வரும் 27-ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நாகாலாந்தின் துன்சாங் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
நாகா அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள முயற்சி பலனளிக்கும் என நம்புகிறேன். கிழக்கு நாகாலாந்தின் வளர்ச்சி மற்றும் உரிமைகள் தொடர்பாக சில சிக்கல்கள் உள்ளன. அவை சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தீர்க்கப்படும்.
வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது. பாஜக ஆட்சியில் இப்பகுதியில் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்துள்ளன. பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு 60 சதவீதமும் பொதுமக்கள் உயிரிழப்பு 83 சதவீதமும் குறைந்துள்ளது.
பாஜக ஆட்சியில் நாகாலாந்தின் பெரும் பகுதியில் இருந்து,ஆயுதப்படை சிறப்பு அதிகாரசட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அடுத்த மூன்று அல்லதுநான்கு ஆண்டுகளில் வடகிழக்குமாநிலங்கள் முழுவதும் இந்த சட்டம் திரும்பப் பெறப்படும் என நம்புகிறேன்.