ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எதிரொலி: ஒரு மாதத்தில் ரூ.500 கோடிக்கு ஜவுளி விற்பனை முடக்கம்.. வணிகர்கள் கவலை..!!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் தேர்தல் விதிமுறைகள் காரணமாக வெளியூர் வியாபாரிகள் வராததால் கடந்த ஒரு மாத காலத்தில் 500 கோடி ரூபாய் அளவிற்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். தென்னிந்திய அளவில் பிரபலமான ஈரோடு ஜவுளி வாரச்சந்தை திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்கிழமை வரை நடைபெறும். இதில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து துணி வகைகளை கொள்முதல் செய்வார்கள்.

இந்த நிலையில் வரும் 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கான அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் கடந்த மாதம் 20ம் தேதி முதல் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஈரோடு ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த ஒரு மாதமாக வெளிமாநில வியாபாரிகள் யாரும் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு சில்லறை வியாபாரமும் குறைந்த அளவில் நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கான ஜவுளி வணிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு ஜவுளி சந்தையில் போதிய வேலை இல்லாததால் பெரும்பாலான ஜவுளி தொழிலாளர்கள் தற்போது தேர்தல் பரப்புரைக்கு சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே இடைத்தேர்தல் முடிந்த பின்னரே ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை இயல்பு நிலையை அடையும் என்பதால் தேர்தல் முடிவடையும் நாளை எதிர்நோக்கி ஜவுளி வணிகர்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.