கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு திமுக கவுன்சிலரால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் இந்தியா முழுவதும் புயலை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய திமுக கவுன்சிலர் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து புகார் மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் தமிழக பாஜக நிர்வாகி தடா பெரியசாமியின் கார் விசிக குண்டர்களால் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து தமிழக ஆளுநரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு மரணம் குறித்து பதிவிட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில் “ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம்.பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர்.
உண்மையில் இது மிகவும் கவலைக்குரிய விஷயம்” என பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு திமுக நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழக ஆளுநர் அரசியல் ரீதியில் செயல்படுவதாக திமுகவினர் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளனர்.