தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். தமிழ் மொழிபடங்கள் மட்டுமின்றி இவர் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படத்திலும் நடித்திருக்கிறார். திரையுலகில் நடிப்பு திறமை மட்டுமின்றி இவர் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்குகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியீடாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான ‘வாத்தி’ படம் மூன்றே நாட்களில் பாக்ஸ் ஆபிசில் ரூ.51 கோடி வசூலை ஈட்டியது. ‘வாத்தி’ படத்தை படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தனுஷ் தனது 50-வது படத்தின் பணிகளை தொடங்கவுள்ளார்.
தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மற்றும் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமும் இதுவாகும். ‘டி50’ படத்திற்கு தற்காலிகமாக ‘ராயன்’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட மெகா பட்ஜெட் படம் சென்னை பகுதியை மையமாக கொண்டு உருவாக்கப்பட இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் போன்ற நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் ‘டி50’ அல்லது ‘ராயன்’ படத்திற்கு இசையமைக்கப்போகும் இசையமைப்பாளர் பற்றிய மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
‘ராயன்’ படத்தில் ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் கைவசம் சிம்புவின் பத்து தல மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு பெரிய படங்கள் உள்ளது. மார்ச் மாதத்தில் இந்த படங்களின் பாடல்கள் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.