வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் நிலைமையை மாற்ற ஒரு விரல் புரட்சியால் மட்டுமே முடியும் என்று ஈரோடு இடைத்தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தில்
பிரேமலதா விஜயகாந்த்
கூறினார்.
பிரேமலதா பிரச்சாரம்!
ஈரோடு இடைத்தேர்தலையொட்டி
தேமுதிக
வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குமலன் குட்டை, சம்பத் நகர், சூரம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
முதல் வெற்றி முரசுக்கு தான்!
பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி உருவானபோது முதல் முறையாக வெற்றி பெற்றது நமது முரசு சின்னம் தான். அதேபோல் தற்பொழுது நடைபெறும் இடைத்தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று சரித்திரத்தில் இடம்பெற நீங்கள் அனைவரும் முரசு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
இளமையான வேட்பாளர் – பிரேமலதா சர்டிஃபிகேட்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது போட்டியிடும் வேட்பாளர்கள் திமுக அதிமுகவை சேர்ந்த இரண்டு பேரும் வயதானவர்கள். அவர்களால் நடக்கக்கூட முடியவில்லை. ஆனால் நம்முடைய வேட்பாளர் சுறுசுறுப்பாக மக்களை சந்தித்து வருகிறார். அவருக்கு மக்கள் இடத்தில் நல்ல பெயர் உள்ளது.
இதுவரை எந்த ஒரு வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. மாறாக மின்கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு உயர்வுகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறுமையை ஒழிக்க இதுதான் வழி!
வறுமைக் கோட்டுக்கு கீழே யாரும் இல்லாத நிலையை உருவாக்குவேன் என்று கூறியவர் விஜயகாந்த். கோபிசெட்டிபாளையத்தில் உணவு இல்லாமல் இரண்டு பேர் இறந்துள்ளனர். இதைக் கேட்டு விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதார். இதுபோன்று பட்டினியால் யாரும் இறக்க கூடாது. மக்கள் தற்போது வறுமை மற்றும் கஷ்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை மாற ஒரு விரல் புரட்சியால் மட்டுமே முடியும். எனவே நீங்கள் வாக்களிக்கும் போது ஒரு நிமிடம் சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார்.