ஈரோடு கிழக்கு: "ஈவிகேஎஸ் இளங்கோவனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" – நாதக வேட்பாளர் மனு

“ஆளும் கட்சியினர் அத்துமீறிலில் ஈடுபட்டு வருவதால் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என உதவி தேர்தல் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு கொடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு கடந்த 20 ஆம் தேதி ஆலமரத்தெருவில் உரிய அனுமதி இல்லாமல் தேர்தல் விதிகளை மீறி நாம் தமிழர் கட்சியினர் பரப்புரை மேற்கொண்ட விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உட்பட 30 பேர் மீது தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மற்றும் தொண்டர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவலர் முத்துக்கிருஷ்ணனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், “எங்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். மற்ற கட்சிகள் தேர்தல் பரப்புரைக்கு வாங்கிய அனுமதி கடிதத்தை எங்களுக்கு காண்பிக்க வேண்டும். வரும் நாட்களில் 33 வார்டுகளில் நாம் தமிழர் கட்சி பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். ஆளும் கட்சி அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
image
இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 20 ஆம் தேதி திண்ணை பிரச்சாரம் செய்யச் சென்றபோது அனுமதி வாங்கவில்லை என்று கூறி என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், திண்ணை பரப்புரை மேற்கொள்ள அனுமதி தேவையில்லை என வாய்மொழியாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பரப்புரை மேற்கொண்டோம். இதற்காக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அதனை ரத்து செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். வரும் நாட்களில் 33 வார்டுகளிலும் பரப்புரை மேற்கொள்வேன், மக்களை சந்திப்பேன். அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மனு கொடுத்துள்ளேன்.
திமுகவினர் 33 வார்டுகளிலும் பரப்புரை மேற்கொள்கிறார்கள். மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். அங்கெல்லாம் போய் பரப்புரை மேற்கொள்கிறார்கள். அவர்கள் வாங்கிய அனுமதி கடிதத்தை என்னிடம் காட்ட வேண்டும் என்று கூறினால், `அது இப்ப எங்களிடம் இல்லை… மதியம் 2 மணிக்கு மேல் வாங்க’ என்று கூறுகிறார்கள். அவர்கள் கொடுக்கவில்லையெனில், இனிமேல் ரெடி பண்ணி கொடுக்கப் போவதாக அர்த்தம். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
image
மக்களுக்கு எல்லாவிதமான பரிசுப் பொருட்களையும் அவர்கள் வழங்கி வருகிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அந்தக் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் மக்களை சந்திக்கப் போன என் மீது வழக்கு போட்டுள்ளனர். நாங்கள் எந்த வித அத்துமீறலும் செய்யவில்லை. அவர்கள் தான் அத்துமீறல் செய்து பணிமனைகளை மூடியுள்ளனர். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதற்காக ஆளுங்கட்சி நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
நேற்று கூட சென்னை மேயர் பிரியா இங்கு பரப்புரை மேற்கொண்டார்கள். அந்த அனுமதி கடிதத்தைக் கேட்டால் கூட இல்லை என்று கூறுகிறார்கள். இப்போது வரை எந்த ஒரு அனுமதி கடிதமும் திமுகவினர் வழங்கவில்லை. அதை தேர்தல் ஆணையம் வாங்கவும் இல்லை. எங்கள் மீது மட்டும் மாறி மாறி வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். வழக்குக்கு நாங்கள் பயப்படப் போவதில்லை… எதையும் சந்திக்க தயார். பணத்துக்கு மேல் பணம் குவிந்து வருகிறார்கள் அவர்கள். மக்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களும் வழங்கி வருகிறார்கள். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் பார்க்கிறார்களா என்று கூட தெரியவில்லை. ஏன் அவர்கள் மீது வழக்குப் பதியவில்லை தேர்தல் ஆணையம்? காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.