புதுடெல்லி: நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று (பிப்.22) டெல்லி மேயர் தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்றார். பாஜகவின் வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் பெற்றார். இதனையடுத்து ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் டெல்லி மாநகராட்சியின் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார்.
ஷெல்லி ஓபராய்க்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, “குண்டர்கள் தோற்றனர், மக்கள் வென்றனர்” என்று வாழ்த்தைப் பதிவு செய்தார். மனிஷ் சிசோடியாவின் ட்வீட்டைத் தொடர்ந்து ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில், “இன்று டெல்லி மாநகராட்சியில், போக்கிரிகளை மக்கள் வென்றுள்ளனர். டெல்லி மக்களுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டு அதில் மேயர் ஓபராய் ஷெல்லியையும் டேக் செய்துள்ளார்.
யார் இந்த ஷெல்லி ஓபராய்? – டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம் பெண் ஷெல்லி ஓபராய், டெல்லி மாநகராட்சியின் 86வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். 39 வயதான ஷெல்லி ஓபராய், இந்திய வர்த்தக கூட்டமைப்பின் (ஐசிஏ) வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார்.
வலுவான கல்விப் பின்னணி கொண்டுள்ளார். கல்லூரியில் இளங்கலை படித்தபோது கல்வியில் சிறந்த விளங்கியதற்காக மிஸ் கம்லா ராணி பரிசைப் பெற்றவராவார். முதுகலைப் பட்டத்தை ஹிமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் டெல்லி இந்திரா காந்தி திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை படிப்புகள் பள்ளியில் தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இத்தகைய கல்விப் பின்னணி கொண்டவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். இந்நிலையில் தற்போது டெல்லி மாநகராட்சியின் மேயர் ஆகியிருக்கிறார்.
மேயர் தேர்தலும் வழக்கும்: டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. பாஜக 104 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. இந்நிலையில், மேயர் தேர்தலுக்கு முன் 10 நியமன உறுப்பினர்களை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நியமித்தார். இதன் மூலம் டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.
இதனால் மாமன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி – பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த 2 மாதங்களில் மேயர் தேர்தல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிப்.18-ல் பிறப்பித்த உத்தரவில், “மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. மேயர் தேர்தலுக்கு பிறகு அவரது தலைமையிலான கூட்டத்தில் துணை மேயர் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறியது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததையடுத்து ஆளுநருக்கு தேர்தல் தேதியை அரசு பரிந்துரைக்க, ஆளுநரும் இசைவு தெரிவித்தார். அதன்படி இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார்.