ஈரோடு இடைத்தேர்தலைவிட தற்போது அரசியல் களத்தில் அதிகளவில் பேசப்படுவது வி.சி.க தலைவர் திருமாவளவனை பா.ஜ.க முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் சந்தித்துப் பேசியிருப்பதுதான். இந்தச் சந்திப்பு குறித்து, “அம்பேத்கர் திடலுக்கு வந்த காயத்ரி ரகுராம் அவர்களுக்கு ‘உலக வரலாற்றில் பெண்கள்’ எனும் நூலைப் பரிசளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன். கருத்தியல் முரண்களைக் கடந்து மனித உறவுகளுக்கான மாண்புகளைப் போற்றுவது சிறுத்தைகளின் சிறப்பாகும்.
அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த காயத்ரி ரகுராம் அவர்களை வரவேற்றுச் சிறப்பித்தோம். ஏப்-14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் அவர் தொடங்கவிருக்கும் சக்தி யா வெற்றிபெற வாழ்த்தினோம்” எனத் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அதற்கு “நன்றி அண்ணா” எனப் பதிவிட்டதோடு, “எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது. வி.சி.க. தலைவர், எம்.பி., அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மாரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு” எனப் பதிலளித்திருந்தார். அரசியல் தளத்தில் நேரெதிர் களத்தில் இயங்கி வந்த இருவரின் சந்திப்பும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கேள்விகளுக்கான விடையை நோக்கிய விசாரணையில் இறங்கினோம்.
“பா.ஜ.க-விலிருந்து விலகிய காயத்ரி, அண்ணாமலையை எதிர்த்து அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே கட்சியிலிருந்து விலகிய பிறகு திருமாவளவனை சந்தித்து அந்த நடைப்பயணத்துக்கான ஆதரவு கேட்க, வி.சி.க பிரமுகர் ஒருவர் மூலமாக நேரம் கேட்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று (பிப்-21) நேரம் ஒதுக்கப்பட்டது. திருமாவளவனை சந்தித்ததன் மூலம் வி.சிக-வில் காயத்ரி இணைவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அண்ணாமலை என்கிற தனி நபருக்கும் காயத்ரிக்கும் தான் பிரச்னையே தவிர, பா.ஜ.க கட்சிக்கும் காயத்திரிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதேநேரத்தில் திருமாவளவன் நேரடியாக பா.ஜ.க, சனாதனம் எதிர்ப்பு என்று தீவிரமாக இருக்கிறார். எனவே இந்த முரண்பாடுகளுக்கிடையில் காயத்ரி வி.சி.க-வில் இணைவது சாத்தியமில்லை” என்கிறார்கள் வி.சி.க நிர்வாகிகள் சிலர்.
“சமூக ரீதியாக தனக்கான பின்புலத்தை காயத்ரி உருவாக்க பார்க்கிறார். அந்த வகையில் ஏற்கனவே தனது வீட்டில் இம்மானுவேல் சேகரன் புகைப்படம் வைத்துத்தான் சில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். இப்போது திருமாவளவனை சந்தித்திருப்பதும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கெதிராக எழுந்த விமர்சனங்களை கொஞ்சம் கொஞ்சமாக தகற்க முயல்கிறார்.
அதோடு, பா.ஜ.க- பெண் நிர்வாகிகளை விமர்சித்து பேசிய தி.மு.க பேச்சாளர் சைதை சாதிக்கிற்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கலந்து கொள்ளாமல் அண்ணாமலை முன்னின்றது அப்போது காயத்ரியால் விமர்சிக்கப்பட்டது. அதே போல், ராணுவ வீரர் மரணத்தை கண்டித்து நேற்று நடந்த ஆர்பாட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்ட செய்திக்கு நிகராக, காயத்ரி திருமாவளவனை சந்தித்த செய்தி வைரலானது. இதன் மூலம் தொடர்ந்து அண்ணாமலைக்கு போட்டியை உருவாக்க முயன்று வருகிறார் காயத்ரி” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.