தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் எழுந்த நிலையில் காவல்துறையினரின் துப்பாக்கி குண்டு சத்தம் அதிகரித்த தொடங்கியுள்ளது.
தொடரும் துப்பாக்கிச் சூடு!
கோவை நீதிமன்ற வளாகம் அருகே நடந்த கொலையில் தொடர்புடையவர்களை சில தினங்களுக்கு முன்னர் போலிஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
இரு தினங்களுக்கு முன்னர் திருச்சியில் போலிஸாரை ஆயுதங்களால் தாக்கிய ரௌடிகளையும் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
இன்று சென்னை அயனாவரத்தில் ரவுடி பெண்டு சூர்யாவை உதவி ஆய்வாளர் மீனா காலில் சுட்டுப் பிடித்தார்.
அயனாவரம் சம்பவம் நடந்தது எப்படி?
அயனாவரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சங்கரை 4 பேர் கும்பல் கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். பைக்கில் தப்பியோடிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் ரவுடி பெண்டு சூர்யா என்பவர் தலைமறைவானார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கியிருந்த சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடிய பெண்டு சூர்யா
இதை தொடர்ந்து அயனாவரம் நியூ ஆவடி சாலையில் திடீரென பெண்டு சூர்யா, கத்தியால் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். கத்திக்குத்தில் காவலர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.
தப்பியோடிய ரவுடி பெண்டு சூர்யாவை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் மீனா முழங்காலில் சுட்டு பிடித்தார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி பெண்டு சூர்யாவுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.