தடைகளை தாண்டி ஆம் ஆத்மி வெற்றி! 39 வயதில் டெல்லி மேயரான ஷெல்லி ஓப்ராய் – யார் இவர்?

டெல்லி மேயர் தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி மாநகராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து டிசம்பர் 7-ம் தேதியன்று முடிவுகள் அறிவிக்கபட்டன. 250 வார்டுகளில் 134 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 104 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஜனவரி 6-ம் தேதி நடைபெற இருந்தது.
பாஜக – ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதல்
ஏற்கனவே வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, தங்கள் தரப்பு வேட்பாளர்களை அறிவித்து இருந்த நிலையில், முதலில் போட்டியில்லை என சொல்லியிருந்த பாஜக திடீர் திருப்பமாக தங்கள் கட்சி சார்பிலும் வேட்பாளர்களை அறிவித்தது. மேலும், மேயர் தேர்தலின் போது, துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் 10 பேர் முதலில் பதவி ஏற்பார்கள் என்றும், மேயர் தேர்தலில் அவர்களும் வாக்களிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு, ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஜனவரி 6-ம் தேதி தேர்தலுக்காக மாநகராட்சி கூடியபோது பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
image
இதனால் அப்போது தேர்தல் ஒத்திவைப்பட்டது. பிறகு இரண்டாம் முறையும் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது மோதல் காரணமாக தேர்தல் நடக்கவில்லை. இதற்கு இடையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மோதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி கட்சியினரும், பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.
மேயர் தேர்தல் – உச்ச நீதிமன்றம்
மூன்று முறை தேர்தல் நடைபெறாமலே ஒத்திவைக்கப்பட்டநிலையில், டெல்லி மேயர் தேர்தலை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் ஷெல்லி ஓப்ராய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியற்றவர்கள் எனவும் தெரிவித்தது. அதன்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைத்த பிப்ரவரி 22-ம் தேதி தேர்தல் நடைபெறும் என ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
image
இதையடுத்து டெல்லி மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்றைய தினம் டெல்லியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஷெல்லி ஓப்ராய் 150 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரேகா குப்தா வெறும் 116 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன்மூலம் 34 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஷெல்லி ஷப்ராய் வெற்றிபெற்று டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த ஷெல்லி ஓப்ராய்?
டெல்லியில் பிறந்து வளர்ந்தவரான ஷெல்லி ஓப்ராய், கடந்த 2013-ம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து, 2020-ம் ஆண்டில் மாநில மகளிர் பிரிவு துணைத் தலைவராகினார். இக்னோ எனப்படும் இந்திராகாந்தி மேலாண்மை பள்ளியில் எம்.பி.ஏ. பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர் ஷெல்லி ஓப்ராய். இந்திய வர்த்தகக் கூட்டமைப்பில் வாழ்நாள் உறுப்பினராகவும் ஷெல்லி ஓபராய் உள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் அவர் இருந்துள்ளார். இதுதவிர, என்எம்ஐஎம்எஸ் (NMIMS), ஐபி (IP), இந்திரா காந்தி பல்கலைக்கழகம் (IGNOU) உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக ஷெல்லி ஓபராய் பணி புரிந்து வந்துள்ளார்.
image
உதவிப் பேராசிரியரும், முதல் முறையாக கவுன்சிலருமான 39 வயதான ஷெல்லி ஓப்ராய், தில்லி பாஜக முன்னாள் தலைவர் ஆதேஷ் குப்தாவின் சொந்தப் பகுதியான கிழக்கு படேல் நகரில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு, தீபாலி குமாரை 269 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அப்பகுதி பாஜக கோட்டையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, டெல்லி மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், குண்டர்கள் தோற்றுப் போய் உள்ளனர் எனவும் கருத்து கூறியுள்ளது. இதுகுறித்து வெற்றிபெற்ற ஷெல்லி ஓப்ராய் தெரிவிக்கையில், டெல்லி மக்களின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைந்து பணி செய்வோம் என்றும், முதல் நாளில் இருந்து பணியை தொடங்கி டெல்லியை குப்பையில்லா நகரமாக மாற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.