டெல்லி: சிவசேனாவின் கட்சி, சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தார். சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சுமார் 40 எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார்கள். இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. தனி அணியாக செயல்பட்ட ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார்கள்.
இதில் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவுடைய தேவிந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இது தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே, ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகியது. அப்போது சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் வில் – அம்பு சின்னம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சொந்தம் என கடந்த வாரம் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது கபில் சிபில் மற்றும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் ஆகியோர் உத்தவ் தாக்கரே சார்பில் வாதங்களை முன்வைத்தார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டிருக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்ய வேண்டும் அல்லது இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சந்திரசூட் தலைமையிலான அமர்வு, வழக்கு தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
உத்தவ் தாக்கரே மனுவுக்கு ஏக்நாத் ஷிண்டே தரப்பு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் – அம்பு சின்னத்தையும் ஒதுக்கியதற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் வேறு நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.