கேரளா: அரிய நோயால் உயிருக்கு போராடும் குழந்தை! பெயர் கூட சொல்லாமல் ரூ11 கோடி அனுப்பிய நபர்

கேரளாவைச் சேர்ந்த 16 மாத குழந்தையின் சிகிச்சைக்கு அடையாளம் தெரியாத நபர் ரூ.11 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தம்பதி சாரங் மேனன் – அதிதி. இருவரும் மும்பையில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இத்தம்பதியினரின் 16 மாத ஆண் குழந்தையான நிர்வானுக்கு முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோய் ஏற்பட்டது. இந்த குழந்தையின் சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்து மருந்து வரவழைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து மருந்தை ஆர்டர் செய்து சிகிச்சை அளிக்க 2.1 மில்லியன் டாலர்கள் (ரூ.17.4 கோடி) செலவாகும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

image
இதனால் செய்வதறியாது தவித்த மேனன் – அதிதி தம்பதியினர், குழந்தையின் சிகிச்சைக்காக milaap.org என்ற இந்திய க்ரவுட் ஃபண்டிங் தளம் வழியாக நல்லுள்ளம் படைத்தோரிடம் நன்கொடை கோரினர். தம்பதியினர் கோரிக்கையை ஏற்று முகம் தெரிந்த, தெரியாத ஆயிரக்கணக்கான பேர் தங்களால் இயன்ற பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவர் நிர்வானின் பெற்றோர்களால் தொடங்கப்பட்ட கிரவுட் ஃபண்டிங் கணக்கில் 11 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளார்.

இதுகுறித்து நிர்வானின் தந்தை சாரங் மேனன் கூறுகையில், ”பெயர் சொல்லாத நபர் ஒருவரிடம் இருந்து 1.4 மில்லியன் டாலர் நன்கொடையைப் பெற்றுள்ளோம். அவர் அமெரிக்காவை சேர்ந்தவராக தெரிகிறது. ஆனால் அவர் ஆணா பெண்ணா என்பது கூட எங்களுக்கு தெரியாது. அவர்களின் பெருந்தன்மை நிர்வானின் சிகிச்சைக்குத் தேவையான நிதியைத் திரட்டும் எங்கள் இலக்கை நெருங்கிவிட்டது. இப்போது 1 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே தேவைப்படுகிறது” என்றார்.

image
குழந்தை நிர்வானை தற்போது மும்பைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். அங்குள்ள பி.டி. இந்துஜா தேசிய மருத்துவமனை மற்றும் மருத்துவ மையத்தில் நரம்பு வழியாக மருந்து செலுத்தப்பட உள்ளது. மருந்து இந்தியா வந்தடைவதற்கு 20 நாட்கள் ஆகும் என்பதால் வரும் மார்ச் 20ஆம் தேதி குழந்தைக்கு மருந்து செலுத்தப்பட உள்ளது.
குழந்தை சிகிச்சைக்கு ஒரே நபர் ரூ.11 கோடி நன்கொடை செலுத்திய சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.