அடுத்தடுத்த புகார்கள்.. என்னவாகும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்? – அரசியல் விமர்சகர் கருத்து

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அலுவலர் உள்ளிட்டோருடன் இந்திய தேர்தல் ஆணைய துணைத்தலைவர் அஜய் பாது காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொகுதி வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்படுவதாகவும், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாகவும், தொடர்ச்சியாக தேர்தல் ஆணையத்திடம் விதிமீறல் புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதுவரை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு 110 புகார்கள் வந்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர் பா. கிருஷ்ணன் பேசுகையில், “இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய பிரச்னையாகவே பார்க்கப்படுகிறது. கடந்த முறை போல் பண பட்டுவாடா மட்டுமில்லாமல், வாக்காளர்களை நாள்முழுவதும் குறிப்பிட்ட இடத்தில் மைதானத்தில் நிறுத்தியது, அதனால் தொழில்கள் பாதிக்கப்பட்டது போன்ற கருத்தில்கொள்ளவேண்டிய பிரச்னைகள் நடந்திருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே அதிமுக எம்.பி சி.வி சண்முகம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்திருக்கின்றனர்.

இந்நிலையில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலையிட்டுள்ளது என்பது தீவிர பிரச்னை இதில் இருப்பதை காட்டுகிறது. தேர்தல்கள் ரத்து செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அண்ணாமலையும் இன்று குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை அப்படி தேர்தல் நிறுத்தப்பட்டால் இது அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவே இருக்கும். இதனால் ஒன்று தேர்தல் ரத்து செய்யப்படும் அல்லது ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் ஒத்திவைத்தாலும் இதே நிலை தொடரும் என்பதால் பெரும்பாலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆரம்பத்திலிருந்து தொடங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால் கூடுதல் பாதுகாப்பு மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள்மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆர்.கே நகர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் நடந்ததுபோல நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.