120 கிமீ ரேஞ்சு.., ரிவர் இண்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் #Riverindie

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ரிவர் மொபைலிட்டி நிறுவனம் தனது முதல் மாடலை River Indie என்ற பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் விற்பனைக்கு ரூ.1.25 லட்சத்தில் அறிமுகம் செய்துள்ளது.

ரிவர் இண்டி ஸ்கூட்டரின் டெலிவரிகள் ஆகஸ்ட் 2023 ல் தொடங்கும் என்பதால் முதன்முறையாக காட்சிப்படுத்தியுள்ளதாகவும், சோதனை முயற்சி தயாரிப்புகள் ஏப்ரல் 2023-ல் தொடங்குகின்றன. முன்பதிவு ஆர்டர்கள் இப்போது துவங்கப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.1250 வசூலிக்கப்படுகின்றது.

River Indie e-scooter

இண்டி பேட்டரி ஸ்கூட்டர் மிகவும் வித்தியாசமான மாறுபட்ட வடிவமைப்பைப் பெற்று, சதுர வடிவ இரட்டை எல்இடி ஹெட்லைட்கள், தட்டையான முன்பகுதி மற்றும் நல்ல அகலமான இருக்கை, நீண்ட உடல் மற்றும் பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் கொண்டு சிறப்பான கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்குகின்றது.

ரிவர் இண்டி மின்சார ஸ்கூட்டரில் ஐபி 67-மதிப்பிடப்பட்ட 4 கிலோவாட் பேட்டரி பேக்கை கொண்டு நிஜத்தில் 120 கிமீ ரேஞ்சு வழங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. முழுமையான சார்ஜிங் பெற 5 மணி நேரத்தில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்யலாம். இண்டி ஸ்கூட்டரில் நடுப்பகுதியில் பொருத்தப்பட்ட மோட்டார் 6.7 கிலோவாட் பவர் மற்றும் 26 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. பின்புற சக்கரத்திற்கு பெல்ட் டிரைவ் வழியாக பவர் அனுப்புகிறது.

3.9 விநாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகும்.

770 மிமீ இருக்கை உயரம் மற்றும் 14 அங்குல சக்கரங்களில் இயங்குகிற இந்த மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்று 240 மிமீ / 200 மிமீ (முன்/பின்புற) டிஸ்க் பிரேக் செட்-அப் உடன் சிபிஎஸ் அமைப்பு உள்ளது. 165 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் உடன் 18 டிகிரி சாய்வுகளில் ஏறும் திறன் கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் ஸ்கூட்டர் இரண்டுக்கும் 5 ஆண்டு அல்லது 50,000 கிமீ உத்தரவாதத்தை கொண்டுள்ளது.

இண்டி ஸ்கூட்டர் கலர் எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று Eco, Ride மற்றும் Rush மூன்று ரைடிங் முறைகளை பெற்றுள்ளது.  இரண்டு யூஎஸ்பி போர்ட், கிராஷ் கார்டு, முன்பக்க கால் வைக்க மிதியடி, சைட் ஸ்டாண்ட் கட்-ஆஃப், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட்  என பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் பெங்களூரில் உள்ள ரிவர் ஆர் அன்ட் டி வசதியில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு, புறநகரில் உள்ள அதன் ஆலையில் தயாரிக்கப்படும். ஆண்டு உற்பத்தி  100,000 அலகுகள் ஆகும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.