ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கான முதல் அணியில் 67 பயனாளிகள் இன்று காசிக்கு புறப்பட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது “இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 இலட்சத்தை அரசே ஏற்கும்“ என்று அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலும் ஆன்மிகப் பயணம் செல்ல விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, தகுதி வாய்ந்த 200 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, 3 அணிகளாக இராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முதல் அணி இன்றும் (22.02.2023), இரண்டாம் அணி 01.03.2023 அன்றும், மூன்றாம் அணி 08.03.2023 அன்றும் புறப்படுகின்றனர்.
இந்த ஆன்மிகப் பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும், பயனாளிகளுக்கு உதவிடும் வகையிலும் ஒவ்வொரு அணியிலும் சிறப்பு அலுவலர்களாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், மருத்துவர் மற்றும் பணியாளர்கள் உடன் செல்கின்றனர். இராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்திற்கான முதல் அணியில் பயணிக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 67 பயனாளிகள் இன்று (22.02.2023) காலை இராமேசுவரத்திற்கு வருகை தந்து அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 23 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பேருந்துகள் மூலம் விழுப்புரத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து நாளை (23.02.2023) காலை புறப்படும் வாரணாசி விரைவு ரயில் மூலம் காசிக்கு புறப்படுகின்றனர். முதல் அணியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இரா.செந்தில் வேலவன், உதவி ஆணையர் பா.பாஸ்கர், மருத்துவர் மோ.விஷ்ணு மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் 4 நபர்கள் உடன் செல்கின்றனர். இந்த ஆன்மிகப் பயணத்தின் முதல் அணியினர் காசியிலிருந்து 26.02.2023 அன்று இரவு புறப்பட்டு 28.02.2023 அன்று இராமேசுவரத்திற்கு வருகை தந்து அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்து பயணத்தை நிறைவு செய்கின்றனர்.