டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் பிபிசி ஊடக நிறுவன அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் கடந்த வாரம் மூன்று நாள்கள் சோதனை நடத்தினர். இதற்கு ஊடக அமைப்புகள் தரப்பிலிருந்தும், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இறுதியாக, சோதனையின் முடிவில் அலுவலகங்களில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு தற்போது, `பிபிசி-க்காக நாங்கள் நிற்கிறோம்’ என இங்கிலாந்து அரசு அதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
பிபிசி அலுவலகங்கள்மீதான வருமான வரித்துறை சோதனை குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய, Foreign, Commonwealth and Development Office (FCDO)-ன் நாடாளுமன்ற துணைச் செயலாளர் டேவிட் ரட்லி (David Rutley), “பிபிசி-க்காக நாங்கள் நிற்கிறோம். அவர்களுக்கு நாங்கள் நிதியளிக்கிறோம். பிபிசி-யின் உலக சேவை மிக முக்கியமானதென்று நினைக்கிறோம். அதோடு, பிபிசி-க்கு பத்திரிகையாளர் சுதந்திரமும் இருக்கவேண்டும் எனக் கருதுகிறோம்.
பிபிசி எங்களையும் விமர்சிக்கிறது, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியையும் விமர்சிக்கிறது. எனவே அந்த சுதந்திரம் முக்கியமானது என்று நம்புகிறோம். இதனை, இந்திய அரசு உட்பட உலகிலுள்ள நம் அனைத்து நண்பர்களுக்கும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் உட்பட 12 மொழிகளில் FCDO நிதி சேவைகளை அளிக்கிறது. இது தொடரும். ஏனெனில், பிபிசி-யின் வாயிலாக ஒரு சுதந்திரக் குரல் உலகம் முழுவதும் கேட்கப்படுவதை நாம் உறுதிசெய்யவேண்டும்” என்றார்.
இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசை விமர்சித்த வடக்கு அயர்லாந்து எம்.பி ஜிம் ஷானன் (Jim Shannon), “ஒரு நாட்டின் தலைவரைப் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, வேண்டுமென்றே மிரட்டும் செயல் இது. ஏழு நாள்களுக்கு முன்பு இந்த சோதனை நடந்தது, FCDO அமைதியாக இருக்கிறது என்று அப்போதிலிருந்தே நான் கூறிவருகிறேன். அரசு தரப்பிலிருந்து அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இது பத்திரிகை சுதந்திரத்தின்மீதான அப்பட்டமான தாக்குதல்” என்று கூறினார்.