ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி திடீரென காலமானார். அதைத் தொடர்ந்து இரண்டரை லட்சம் வாக்காளர்களை கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு நாள் நெருங்கி வருவதால், ஈரோட்டி பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள திருநகர் காலனியில் கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான்
, “விஜயநகர மன்னர்கள் முதலியார்களிடம் பட்டாடை செய்து தரக் கேட்டார்கள். ஆனால் முதலியார்கள் வேறு ஆளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் விஜயநகர மன்னர்கள் சவுராஷ்டிராக்களை குஜராத்தில் இருந்து இறக்கினார்கள்.
அதேபோல் கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று விஜயநகர அரசர்கல் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஆந்திராவில் இருந்து மலம் அள்ள அருந்ததியர்களை இங்கு கொண்டு வந்து இறக்கினார்கள்” என்றார்.
சீமானின் இந்த பேச்சு பட்டியலின மக்களான அருந்ததியர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஈரோட்டில் அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிக்கு ஓட்டு கேட்க வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களை, அருந்ததிய மக்கள் விரட்டினர். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் சீமானின் உருவ பொம்மை எரிப்பு, அருந்ததிய குடியிருப்புகளில் இருந்த நாம் தமிழர் கொடிக் கம்பங்கள் அகற்றம் உள்ளிட்டவைகளும் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து சீமான் கூறும்போது, “அருந்ததியின மக்கள் குறித்து வரலாற்றுத் தகவல்களையே பேசினேன். விஜயநகர மன்னர்கள் ஆண்டபோது இங்கு வந்தனர் என்பது வரலாறு. வரலாற்று ஆதாரங்களை கூட காட்ட தயார். இதில் அவர்கள் கோபித்துக்கொள்ள ஒன்றுமில்லை. அருந்ததிய மக்கள் மீது எனக்கு பேரன்பு உள்ளது. திமுக தனது வாக்குவங்கி போய்விடும் என அருந்திய அமைப்பினரை தூண்டி விட்டு இந்த சர்ச்சையை கிளப்பியுள்ளனர்” என தெரிவித்தார்.
சிவகங்கை – மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு.
இந்தநிலையில் இது தொடர்பாக அனைத்திந்திய அருந்ததியர் மக்கள் மற்றும் சமூக நீதி மக்கள் கட்சியின் சார்பாக அளிக்கப்பட்ட புகாரில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா விளக்கம் அளிக்கும் படி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்காவிட்டால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நோட்டீசில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீமானின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கருங்கல்பாளையம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.