புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சுமார் 80 மாணவர்கள் படிக்கின்றனர். நூற்றாண்டைக் கடந்த இந்தப் பள்ளியில், போதிய வகுப்பறைக் கட்டடங்கள் இல்லாததால், அங்கன்வாடிக்காகக் கட்டப்பட்ட, கட்டடத்தில் தான் தற்போது மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது. போதுமான வகுப்பறைகளை ஏற்படுத்த வேண்டும். பழமையான கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் கட்டி மாணவர்கள் நெருக்கடி இல்லாமல் படிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தான், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், மாணவர்களுடன் பள்ளிமுன் குவிந்த பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்குள் அனுப்பாமல், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகம், வட்டாட்சியர் செந்தில் நாயகி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.
இதையடுத்து, சமாதனமான பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்பு, மாணவர்களை வகுப்புக்கு அனுப்பினர். இது குறித்து பெற்றோர்கள் கூறும் போது, “1990-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில், தொடர்ந்து, மாணவர்கள் எண்ணிக்கை அதிகமான நிலையிலும், புதிய கட்டடங்கள் ஏதும் அமைக்கவில்லை. நெருக்கடி நிலையிலேயே மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக, புத்தகப் பைகளை வெளியிலேயே வைத்துவிட்டு, மாணவர்கள் உள்ளே சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது.
புத்தகப்பையை வைப்பதற்கும், அமர்வதற்கும் போதுமான வசதிகள் இல்லை. போதுமான ஆசிரியர்கள் இல்லை. புதிய கட்டடம் கட்டாததால், அங்கன்வாடிக் கட்டிடத்தில் தான் படிக்கின்றனர். அங்கன்வாடியோ, சமுதாயக் கூடத்தில் செயல்படுகிறது. பள்ளிக்குள் இடித்துப்போட்ட கட்டடத்தை அகற்றாமல் வைத்திருக்கின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் நாய்கள் உள்ளே வந்து மாணவர்களை அச்சுறுத்துகிறது. அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு மாதத்திற்குள் போதுமான வசதிகளை ஏற்படுத்தாவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்” என்றனர்.