அதானி குழும பங்குகளுக்கு அடிமேல் அடி! பல கோடிகள் இழப்பு.. பின்னுக்கு தள்ளப்பட்டார் அதானி!

பங்குகள் விலை வீழ்ச்சியால் அதானி குழும நிறுவனங்களுக்கு ஒரு மாதத்தில் ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது நாளாக இன்றும் பங்குச்சந்தையில் சரிவு
இந்தியப் பங்குச் சந்தைகள், இன்று கணிமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தக நிறைவில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 927 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 744 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 272 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு 17 ஆயிரத்து 554 புள்ளிகளிலும் வர்த்தகமாகியது.
பங்குச் சந்தையில் ஹெவிவெயிட் பங்குகள் என்று அழைக்கப்படும் பஜாஜ் பின்சர்வ், பைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, என்டிபிசி, எச்யுஎல், ஏசியன்பெயின்ட்ஸ், ஆகியவை 3 சதவீதம்வரை இன்று சரிந்தது சரிவுக்கு காரணங்களில் ஒன்று. மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில், ஐடிசி நிறுவனப் பங்கைத் தவிர மற்ற 29 நிறுவனப் பங்குகளும் சரிவில் முடிந்தன.
image
பங்குச் சந்தை சரிவுக்கு காரணம் என்ன?
இந்திய சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வரும் நிலையிலும், உள்நாட்டில் பணவீக்க உயர்வு, சர்வதேச பொருளாதார மந்தநிலை, அமெரிக்க மைய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தப்போவதாக வந்த தகவல் போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து 4வது நாளாக பங்குச்சந்தை இன்றும் சரிவில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 4 நாட்களில் மட்டும் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.7 லட்சம் கோடி குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.3.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 வர்த்தக தினங்களில்மட்டும் சென்செக்ஸ் 1500 புள்ளிகளை இழந்துள்ளது. இந்தியப் பங்குச்சந்தையின் மதிப்பு 261.40 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
image
இன்றும் வீழ்ச்சியில் அதானி குழும பங்குகள்!
சர்ச்சையில் சிக்கியுள்ள அதானி குழும பங்குகளும் இன்றும் வீழ்ச்சியடைந்தன. அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர்ம், அதானி கிரீன் என பல பங்குகளும் அதிக இழப்பைச் சந்தித்தன. அதானி என்டர்பிரைசர்ஸ் பங்கு இன்று 10% சரிந்தது. அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் இன்று வீழ்ச்சி அடைந்தன.
1,540 ரூபாய்க்கு தொடங்கிய அதானி நிறுவன பங்கு விலை வர்த்தக முடிவில் 1400 ரூபாயாக சரிந்துள்ளது. அதானி நிறுவன பங்குகள் ஒரேநாளில் பங்கு ஒன்றுக்கு 150 ரூபாய் சரிந்ததால் வர்த்தகர்களும், முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பங்குகள் விலை வீழ்ச்சியால் அதானி குழும நிறுவனங்களுக்கு ஒரு மாதத்தில் ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

26 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார் கௌதம் அதானி!
அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 40 ஆயிரம் கோடி ரூபாய் சரிந்துள்ளது. ஒரு மாதத்தில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 11 லட்சம் கோடி சரிந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக, ஃபோர்ப்ஸ் (FORBES) உலக பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 26ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 3 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதே பட்டியலில் சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 8ஆவது இடத்தில் இருப்பது கவனிக்கதக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.