சென்னை: ‘இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல், டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?’ என்ற கேள்விக்கு செயற்கை நுண்ணறிவு பெற்ற சாட்பாட் ஆன சாட்ஜி பிடி பதில் அளித்துள்ளது.
30 வயதான கே.எல்.ராகுல், இந்திய அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 81 இன்னிங்ஸில் 2,642 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதம் மற்றும் 7 சதங்கள் அடங்கும். இருந்தபோதும் கடந்த ஓராண்டு காலமாக அவர் சரிவர ஆடுவதில்லை.
கடந்த 2022 முதல் அண்மையில் முடிந்த டெல்லி டெஸ்ட் போட்டி வரையில் ராகுல் மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 11 இன்னிங்ஸ். அதில் முறையே 50, 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ரன்களை அவர் எடுத்துள்ளார். இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவர் இடம் பிடித்துள்ளார். அது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் டெஸ்ட் அணியில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட வேண்டுமா? என்ற கேள்வி சாட்ஜி பிடி-யில் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ‘ஏஐ லாங்குவேஜ் மாடல் என்பதால் தனிநபர்கள் மற்றும் அணிகள் குறித்து கருத்துகள் என்னிடம் இல்லை. ஆனாலும், அணியில் ஒரு வீரரை நீக்குவதற்கான பொது விதிகளை என்னால் சொல்ல முடியும். ஒரு வீரரின் அண்மைய செயல்பாடு, உடல்திறன் மற்றும் அவரது ஆட்டத்திறன் போன்றவை அணியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பதை பொறுத்தே அது அமையும்.
ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லையெனில் அணி நிர்வாகம் அவரை நீக்கிவிட்டு, மாற்று வீரரை ஆட வைக்கலாம். அவரது செயல்பாடு சிறப்பாக இருந்து, அது அணிக்கு முக்கியமானதாக இருந்தால் அணியில் தக்க வைக்கப்படலாம். அணித் தேர்வு என்பது ஒரு வீரரின் செயல்பாடு, உடல்திறன், யுக்தி மற்றும் சூழ்நிலைகளை பொருத்தும் அணி நிர்வாகம் மேற்கொள்ளும்’ என சாட்ஜி பிடி தெரிவித்துள்ளது.