டெல்லி நிலை குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் இரவு முழுவதும் மோதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
டெல்லியில் புதிய மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதற்கு பிறகு சில மணி நேரங்களிலேயே, நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. அப்போது அவைக்குள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
நிலைகுழு உறுப்பினர்களின் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்க சென்ற போது, கைபேசிகளை எடுத்துச் சென்று புகைப்படங்கள் எடுத்ததாகவும், இதனால் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருவரையொருவர் , பலெட் காகிதங்கள், தண்ணீர் பாட்டில்கள், டீ கப்புகள் உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கி கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நிலைகுழு தேர்தலில் ஏற்பட்ட மோதல் குறித்து, புதிய மேயராக பொறுப்பேற்றுள்ள ஷெல்லி ஓபராய், நிலைக்குழு தேர்தலை நடத்த முயன்ற தன்னை பாஜக கவுன்சிலர்கள் தாக்க முயன்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து குற்றம்சாட்டி உள்ளார்.
இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ஆம் ஆத்மி மேயர் மற்றும் மகளிர் கவுன்சிலர்களை பாஜகவினர் தண்ணீர் பாட்டில்களால் தாக்கியதை, இன்று நாடு முழுவதும் கண்டுள்ளது. பா.ஜ.க. குண்டர்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களின் கட்சி என்று பதிவிட்டுள்ளது. இந்நிலையில், அவையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோக்களை ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதைப்போன்று இரு தரப்பினர்களுக்கிடையேயும், இரவு முழுவதும் ஏற்பட்ட கைகலப்பு , கடும் வாக்கு வாதம் காரணமாக அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலையும் இருதரப்பினரும் அதையே தொடர்ந்ததால், அவை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM