ம.தி.மு.க-விலிருந்து ஏற்கெனவே பல சீனியர்கள் கட்டம் கட்டப்பட்ட நிலையில், இப்போது வளைகுடா நாடுகளின் ம.தி.மு.க அமைப்பாளர் வல்லம் பசீர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பின்னணியை விசாரித்தால், சாதிப்புயல்தான் அவரைக் கவிழ்த்துவிட்டது என்கிறார்கள். அதாவது, வளைகுடா நாட்டில் வேலை பார்த்த கட்சித் தொண்டர் ஒருவர் இறந்தநிலையில், அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற்றுத்தர பல முயற்சிகளை முன்னெடுத்தது ம.தி.மு.க. ஆனால், தென்மாவட்டத்தைச் சேர்ந்த சாதி அமைப்பொன்று அதற்கெல்லாம் நாங்கள்தான் காரணம் என்று உரிமை கொண்டாடியிருக்கிறது.
அந்தச் சாதிய அமைப்புக்கு எதிராகவும், வைகோவுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் வல்லம் பசீர். இது சர்ச்சையாக்கப்பட்டதாலேயே அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டதாம். “சாதி அமைப்பை சமாதானப்படுத்த கட்சிக்காரரை பலிகொடுப்பதா… எங்கே எங்கள் புரட்சிப்புயல்… அடங்கிவிட்டதா..?” எனக் கொந்தளிக்கிறார்கள் சீனியர்கள்.
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு சேர்மனாக இருக்கும் செல்லம்மாள், தான் பொறுப்புக்கு வந்த நாள் முதலே சொந்தக் கட்சியினரால் கடுமையான இம்சைக்கு ஆளாகிவருவதாகப் புலம்பிக்கொண்டிருக்கிறார். ‘நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவள் என்பதாலேயே இவ்வாறு இம்சிக்கப்படுகிறேன். மனவேதனையில் இருக்கும் என்னைத் தற்கொலை முடிவுக்குத் தள்ளப் பார்க்கிறார்கள்’ என இப்போது தி.மு.க தலைவருக்கே நேரடியாகப் புகார் அனுப்பியிருக்கிறார் செல்லம்மாள். ஆனாலும், மேலிடத்திலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இதைக் கேள்விப்பட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செல்லம்மாளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார்.
அதேபோல, அவரது சமூக அமைப்புகளும் ஒன்று திரள்வதால், தென்காசி மாவட்ட தி.மு.க-வினர் விரைவில் தலைமைக்கழகத்துக்கு அழைக்கப்படுவார்கள் என்கிறது அறிவாலய வட்டாரம்.
உப்புக்குப் பெயர்போன மாவட்டத்தின் தலைநகரில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்துவருகின்றன. தன் தொகுதி எல்லைக்குள் இருக்கும் வார்டுகளில் நடக்கும் பணிகளுக்குத் தனியாக கவனிப்பு வேண்டும் என்று ஒப்பந்தகாரர்களின் ஜீவனை எடுக்கிறாராம் ஓர் அமைச்சர். ‘அப்ப நான் மட்டும் சும்மாவா… எனக்குரிய ஸ்வீட்டும் வந்துவிட வேண்டும்’ என்று வேட்டியை ஏற்றிக்கட்டுகிறாராம் இன்னோர் அமைச்சர். இவர்களுக்கு இடையில் சிக்கி அடிவாங்கும் ஒப்பந்ததாரர்கள், ‘சரி கொடுத்துவிடலாம்’ என்று முடிவெடுத்த நிலையில், மாநகராட்சி மேலிடமும் குறுக்கே வந்து நிற்கிறதாம். “பில் பாஸ் ஆகணும்னா என் தயவும் வேணும்… தெரியும்ல?” எனக் கண்சிமிட்டுகிறாராம் மாநகராட்சிப் புள்ளி. ‘அ.தி.மு.க ஆட்சியில கமிஷன் கொடுத்தே ஸ்மார்ட் சிட்டி சுமார் சிட்டியாகிடுச்சு… இப்ப இவங்க பண்ற கூத்துல என்னவாகப்போகுதோ?’ என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
மலைக்கோட்டை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளின் குடும்பத்தினர் தங்குவதற்காக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடம் கட்ட சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது அரசு. இந்தப் பணிக்காக டெண்டர்விடுவதற்கு முன்பே, ‘எப்படியும் உனக்குத்தான் டெண்டர்… நம்மள மறந்துறாத என்ன?’ என்று குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு கண்ணசைத்திருக்கிறார் மாநகராட்சி மேயர். சந்தோஷத்தில் கான்ட்ராக்டர் ஒருவர் டெண்டர் விடுவதற்கு முன்பு பூமிபூஜையே போட்டுவிட்டார்.
இந்த விவகாரம் மீசை அமைச்சர் தரப்பின் காதுக்குச் செல்ல, சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டரை அடிக்காத குறையாக விரட்டிவிட்டிருக்கிறார்கள். இப்போது முறைப்படி டெண்டரும் விடப்பட்டிருக்கிறது. மீசையின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என, ‘அண்ணே இதெல்லாம் எனக்கே தெரியாம அதிகாரிங்க செஞ்சுட்டாங்க’ என ஆக்டிங் கொடுக்கிறாராம் மேயர்.
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு கொலைச் சம்பவத்தை, தி.மு.க-வோடு தொடர்புபடுத்தி அகில இந்திய அளவில் அரசியல் செய்துவருகிறது பா.ஜ.க. அந்தக் கொலையைக் கண்டித்து சென்னையில் நடந்த உண்ணாவிரதம், மெழுகுவத்தி பேரணிக்கும் வடமாநில ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் இந்தப் பிரசாரம் எடுபடவில்லை என்றாலும், டெல்லியில், ‘தேசத்துக்கு எதிரான கட்சி தி.மு.க’ என்றும், ‘பிரிவினைவாதி ஸ்டாலின்’ என்றும் சித்திரித்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவருகிறது பா.ஜ.க. அடுத்தகட்டமாக மற்ற மாநிலங்களில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்புகளையும் ஒன்று திரட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் புகார்க் கடிதம் கொடுக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் பா.ஜ.க-வினர். ‘ஆர்ட்டிகிள் 356’ என்றெல்லாம் பூச்சாண்டி காட்டப்படுவதால், இதை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறதாம் அறிவாலயம்.