ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்னென்ன வாய்ப்புகள்?

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில்
எடப்பாடி பழனிசாமி
இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு இரட்டை தலைமையில் நிலவி வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருக்கிறது. இனிமேல் ஒற்றை அதிகாரம் கொண்ட தலைமையாக செயல்படுவார்.

ஓபிஎஸ்சிற்கு வாய்ப்புகள் குறைவு

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை நீதிமன்ற வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு. தற்போது இரண்டு நபர்கள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். இதுபோன்று அரசியல் கட்சிக்குள் நடக்கும் விவகாரங்கள் தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுவதை உச்ச நீதிமன்றம் பெரிதாக விரும்பாது என்றே சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உச்ச நீதிமன்ற அமர்வு ஒருமித்த தீர்ப்பு

அப்படியே ஏற்றுக் கொண்டாலும் மூன்று நபர்கள் கொண்ட அமர்விற்கு மாற்றி மீண்டும் விசாரிக்க வாய்ப்புகள் கிடையாது. அடிப்படை உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் என்றால் நீதிமன்றம் அடுத்தகட்ட உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புண்டு. இது கட்சி சார்ந்த விஷயம் என்பதால் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக இன்று தீர்ப்பு வழங்கிய அமர்வில் இரண்டு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை உறுதி செய்துள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் முறையீடு

ஓ.பன்னீர்செல்வம்
அடுத்தகட்டமாக தேர்தல் ஆணையத்தை நாடலாம். ஏனெனில் கட்சி, சின்னம் யாருக்கு? என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு தான் உள்ளது. வேண்டுமெனில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை ஏற்றுக் கொள்ளலாம். அதேசமயம் தனக்கான விதிமுறைகளின் படியே தேர்தல் ஆணையம் செயல்பட விரும்பும். அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் தனது தரப்பு வாதத்தை தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கலாம்.

இடைக்கால உத்தரவு

தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகளும் அதிமுகவில் இன்னும் அமலில் இருந்து வருகின்றன. இந்த சூழலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி கட்சியும், சின்னத்தையும் தனக்கே ஒதுக்குமாறு எடப்பாடி தரப்பு வாதிடும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை இறுதி தீர்ப்பாக உச்ச நீதிமன்றம் மாற்றிவிட்டது.

எடப்பாடிக்கே அதிமுக

அதையே தேர்தல் ஆணையமும் ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார். ஏற்கனவே சிவசேனா வழக்கில் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுத்தது? என்பதை அனைவரும் அறிவர். பெரும்பான்மை உறுப்பினர்கள், வாக்கு வங்கி ஆகியவற்றின் அடிப்படையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு சாதகமாக முடிவுகள் வெளியாகின. இதை வைத்து பார்க்கும் போது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கே அதிமுக என்ற தீர்ப்பு தேர்தல் ஆணையத்தில் இருந்தும் வெளிவரலாம்.

டெல்லியின் முடிவு

அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்பிருக்கும் வாய்ப்புகள் மிக மிக குறைவு. இவருக்கு டெல்லியின் சப்போர்ட் தொடர்ச்சியாக இருந்து வந்தது. ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பக்கம் சப்போர்ட் மாறியது. தற்போது இறுதி தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் ஓபிஎஸ்சை ஒட்டுமொத்தமாக கழட்டிவிட டெல்லி முடிவு செய்துவிட்டதா? என்ற சந்தேகத்தை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.