இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளு பேரன் காங்கிரசில் இருந்து விலகல்

புதுடெல்லி,

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

இதுபற்றி அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பி உள்ளார். அதன்படி, கடந்த 2001-ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளார்.

அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி மையத்தின் துணை தலைவர் (ஒரு மாநில மந்திரிக்கு இணையானது) என்ற பதவியை வகித்து உள்ளார். பிரசார் பாரதி வாரியத்தின் உறுப்பினர், இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய கவுன்சில் உறுப்பினர் மற்றும் தேசிய ஊடக குழு உறுப்பினர் என எண்ணற்ற பதவிகளை வகித்து உள்ளார்.

இதற்காக, காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா காந்திஜி ஆகியோருக்கு அவர் தனது நன்றியை தெரிவித்து உள்ளார். கடிதத்தில் அவர், எனினும், 2 தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் நான் கட்சி பணியாற்றுவதற்கான மதிப்புக்குரிய விசயங்களின் அடையாளங்கள் தற்போது இல்லை என உண்மையில் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

அதனாலேயே, சமீபத்திய இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தேன். தேசிய அளவிலான அமைப்புக்கான பொறுப்பை ஏற்கவும் சமீபத்தில் மறுத்து விட்டேன்.

நான் தற்போது புதிய பாதையை வகுத்து அதில் செயல்படுவதற்கான தருணம் வந்து உள்ளது. அதனால், காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுகிறேன். இதுபற்றிய விலகல் விவரங்களை, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அறக்கட்டளை அமைப்புக்கும் முறையாக தெரிவித்து உள்ளேன்.

இதன் தொடர்ச்சியாக, நான் மற்றொரு கட்சியில் சேர போகிறேன் என யூகங்கள் கிளம்பி இருக்கும். ஆனால், நேர்மையாக கூறுவதென்றால், யாரிடமும் நான் பேசவில்லை. உண்மையில், அடுத்து என்ன நடக்க உள்ளது என எனக்கு தெரியாது என தெரிவித்து உள்ளார்.

எனினும், ஓர் அரசியல் தளத்தின் வழியே நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு என நல்ல நம்பிக்கையில் முயற்சி செய்ய உள்ளேன். நமது சிறந்த தேசம் உருவாக அடிப்படையாக இருந்த தந்தையர் மற்றும் அன்னையர் மற்றும் எனது கொள்ளு தாத்தா சி. ராஜகோபாலச்சாரி ஆகியோரை போற்றி பாதுகாக்கும் வகையில், பொதுவாழ்வின் ஒற்றுமை மற்றும் கருத்துகளை உறுதியாக பின்பற்றி நான் தொடர கூடிய வகையில் அது இருக்கும் என அவர் கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.