இது அல்ல மார்ச் 2ஆம் தேதிதான் தீர்ப்பு: ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில்
எடப்பாடி பழனிசாமி
ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்துக்கு பால் அபிஷேகம் செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

மறுபக்கம் ஓ.பன்னீர் செல்வம் அணி வெறிச்சோடி காணப்படுகிறது. பெரியகுளம் சென்ற ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் தொலைக்காட்சியை பார்த்தபடி யாரையும் சந்திக்காமல் உள்ளார். சட்ட நிபுணர்களுடன் தொலைபேசியில் ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகிறது.

இந்த சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தியை சமயம் தமிழ் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படி எதிர்கொள்கிறீர்கள், உங்களுக்கு இதை பின்னடைவாக பார்க்கலாமா என்று கேள்வியை முன் வைத்தோம்.

“முதலில் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம். தீர்ப்பு குறித்து இன்னும்
ஓபிஎஸ்
ஐயாவிடம் பேசவில்லை. தீர்ப்பின் முழு விவரம் வெளியான பின்னரே அடுத்தகட்டம் குறித்து முடிவெடுக்க முடியும். முழு விவரத்தை பார்த்த பின்னரே எங்களுக்கு சாதகமான அம்சங்கள் எவை இருக்கின்றன, அவர்களுக்கு சாதகமாக எவை இருக்கின்றன என்பதை பார்க்க முடியும். சிவில் வழக்குகளை தொடர்வதில் சிக்கல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். அதற்கும் வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி நடத்திய தர்மயுத்தம் வெற்றி பெற்றது என்று கே.பி.முனுசாமி கூறியிருக்கிறாரே என்று கேட்ட போது, அதற்கு பதிலளித்த அவர், “காசு இருக்கும் பக்கத்தில் தான் பேசுவார் அந்த ஆள். ஓபிஎஸ் ஐயா பக்கம் தான் தொண்டர்கள் எப்போதும் அணி வகுப்போம்” என்று கூறினார்.

மேலும் அவர், “எங்களுக்கு இது பின்னடைவு அல்ல. மாறாக வேகமாக இயங்குவதற்கு உற்சாகம் பெற்றுள்ளோம். இரட்டை இலை சின்னம் இருக்கும் போது முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டாரே மக்கள் அவரை ஏற்றுக்கொண்டார்களா இல்லையே.. அவர் எத்தனை பொதுத் தேர்தலை சந்தித்திருக்கிறார், எத்தனை இடைத்தேர்தலை சந்தித்திருக்கிறார்? அவருக்கு எல்லாமே பின்னடவாகத் தான் இருந்தது. மார்ச் 2ஆம் தேதி மக்கள் கொடுப்பார்கள் ஒரு தீர்ப்பு. அந்த தீர்ப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.