ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்கி தீர்மானம் எடுத்தது எடப்பாடி தலைமையிலான பொதுக்குழு. மேலும், அந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகவும் அறிவிக்கப்பட்டார். இதுகுறித்து இரு தரப்பிலும் தாக்கல் செய்த வழக்கில், பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளிக்க, இரு நீதிபதி அமர்வு செல்லும் என தீர்ப்பளிக்க, இவ்வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது.
நீதிமன்றம் உதவாது
இந்நிலையில், இன்று பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒற்றை தலைமை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்து ஓபிஎஸ்-இன் நகர்வு எப்படி இருக்கும் என்பதற்கு சில சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஒன்று, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு செல்லலாம். ஆனால், அந்த மனுவை மீண்டும் உச்ச நீதிமன்றம் ஏற்க வாய்ப்பு மிக மிக குறைவு. பொதுவாக கட்சி உரிமை சார்ந்த விவகாரங்களை நீதிமன்றங்கள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்க விரும்பாது. அப்படி எடுத்தாலும், கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை, வாக்கு வங்கியை காரணம் வைத்து எடப்பாடிக்குதான் மீண்டும் சாதகமான உத்தரவு வரும்.
தேவர் சமூகத்துக்கு கொக்கி
இரண்டாவது, பிளான் பி-யாக
ஓபிஎஸ்
பாஜகவில் இணைவது. தேவர் சமூக வாக்குகளுக்காக ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் மீண்டும் இணைக்க பாஜக தொடர் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், எடப்பாடி அதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததால் பாஜகவுக்கு அந்த பிளான் கைகொடுக்கவில்லை. மேலும், தேர்தல் நேரங்களில் பாஜகவை இரண்டாம் பட்சமாக எடப்பாடி பழனிசாமி கருதுவதை பாஜக விரும்பவில்லை. இந்நிலையில், அதிமுகவில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ள ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் இணைத்துக்கொண்டு தேவர் வாக்கு வங்கியை கூட்டிக்கொள்ள பாஜக நிச்சயமாக முயற்சிக்கும்.
காத்திருக்கிறதா பதவி
இந்நிலையில், உதயநிதி குறிப்பிட்டதை போல ஓபிஎஸ்-க்கு ஆளுநர் பதவி காத்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு உண்மையாக இவர்கள் இல்லை. ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் சட்டமன்றத்தில் எனது காரை எடுத்துக்கொண்டு கமலாலயம் செல்ல மாட்டோம் என கூறிவிட்டு இன்று இருவரும் கமலாயம் சென்று காத்துக் கிடக்கிறார்கள்.
பாஜக அலுவலகம் கட்சி அலுவலகம் கிடையாது அது ஒரு பயிற்சி சென்டர். ஏனென்றால், அங்கிருந்த தமிழிசை கவர்னர் ஆகிவிட்டார். தற்போது சிபி ராதாகிருஷ்ணன் கவர்னர் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் கவர்னராக அறிவிக்கப்படுவார் என்று உதயநிதி கூறியதுதான் நடக்கும் என்று கணிப்புகள் எழுந்துள்ளது. மேலும், ஓபிஎஸ்- இன் இந்த நிலைமைக்கு காரணம் யார் என்று அரசியல் அரங்கில் அனைவரும் தெரியும் எனவே, டெல்லியில் இருந்து அதுபோன்ற ஆஃபர் வந்தால் ஓபிஎஸ் ஏற்காமலா இருப்பார் என்ற கணக்குகளும் போடப்பட்டு வருகிறது.