அதானிக்கு எதிராக களத்தில் இறங்கிய ஊழியர்கள்…! கடனை அடைத்து நம்பிக்கையை மீட்பாரா அதானி ?!

அதானி மீதான குற்றச்ச்சாட்டுகள் ஏற்படுத்திய அதிர்வலை இன்னமும் வீரியம் குறையாமல் இருக்கிறது. பணமோசடி, பங்குச் சந்தை மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதானி குழும நிறுவனங்களைத் தாக்கிய ஹிண்டன்பர்க் அறிக்கையால் இதுவரை ரூ.11 லட்சம் கோடியை அதானி குழுமப் பங்குகள் இழந்துள்ளன.

கவுதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்தவர் இப்போது 26-ம் இடத்தில் இருக்கிறார். அதானி குழுமப் பங்குகளின் சரிவினால் இந்தியப் பங்குச் சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். இந்நிலையில் அதானிக்கு எதிராக அதானி நிறுவன ஊழியர்களே சிலர் செயல்பட்டுவருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சரிவில் அதானி

விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களைப் பதிவிடலாம் என்ற வசதி இருக்கிறது. இதைப் பயன்படுத்தி அதானி நிறுவன ஊழியர்கள் சிலர் அதானி குழுமம் தொடர்பான பக்கத்தில் நடுநிலையற்ற தகவல்களைப் பதிவிட்டுள்ளனர். விக்கிபீடியாவில் 40-க்கும் மேலான போலிக் கணக்குகள் மூலமாக அதானி குழும நிறுவனங்கள் தொடர்பாகக் கட்டுரைகளைப் பதிவிட்டுள்ளனர் என்பது அதிர்ச்சித் தரக்கூடிய செய்தியாக இருக்கிறது.

இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்கள் மீதான முதலீட்டாளர்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்கு கவுதம் அதானி தொடர்ந்து முயற்சி செய்துவருகிறார். ஆரம்பத்திலேயே ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர் முறையில் ரூ.20 ஆயிரம் கோடி அளவிலான பங்கு விற்பனையை ரத்து செய்து முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்ப வழங்கினார்.

மேலும் அதானி குழுமத்துக்கு உள்ள கடன்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். அதானி குழுமத்துக்கு சுமார் ரூ.2.26 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இவை வங்கிகளில் வாங்கியக் கடன், கடன் பத்திரங்கள் மூலமாகத் திரட்டிய நிதி, பங்கு அடமானக் கடன் என அனைத்தும் அடங்கும். இவற்றில் சில வாரங்களுக்கு முன் ரூ.9,250 கோடி மதிப்பிலான கடனைத் திரும்பச் செலுத்தினார். தற்போது அதானி போர்ட்ஸ் நிறுவனம் ரூ.1,500 கோடி கடனைத் திரும்பச் செலுத்தி உள்ளது.

நாதன் ஆண்டர்சன், அதானி

இதில் ரூ.1,000 கோடி எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் நிறு வனத்துக்கும் ரூ.500 கோடி ஆதித்ய பிர்லா லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் முடிவுக்கு வராத அதானி-ஹிண்டன்பர்க் சர்ச்சைக்கு நடுவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க கடும் முயற்சிகளை அதானி குழுமம் எடுத்துவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.