நாகாலாந்தில் 60 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகப் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், நாகலாந்தின் திமாபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி,” நாகாலாந்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாடுபடுகிறது.
சொந்த மக்களின் மீதே அவநம்பிக்கை வைத்து நாட்டை நடத்த முடியாது. முன்பு வடகிழக்கில் பிளவு அரசியல் இருந்தது, இப்போது அதை தெய்வீக ஆட்சியாக மாற்றியிருக்கிறோம். மதத்தின் அடிப்படையில் பா.ஜ.க மக்களிடத்தில் பாகுபாடு காட்டுவதில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது நாகாலாந்தில் அரசியல் உறுதித் தன்மையில்லை. டெல்லியிலிருந்து வடகிழக்கு பகுதியை ரிமோட் மூலம் காங்கிரஸ் கட்டுப்படுத்தி வந்தது. மேலும், அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கான பணத்தை அபகரித்தன. ஏனென்றால், வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பயன்படுத்தியது.
ஆனால், பாஜக அஷ்டலட்சுமியாக பார்க்கிறது. ஆனால், பா.ஜ.க வடகிழக்கின் 8 மாநிலங்களையும் அஷ்டலட்சுமியாக பார்க்கிறது. அதனால், இந்த மாநிலங்களின் அமைதி, வளர்ச்சி மீது கவனம் செலுத்துகிறது. மேலும், காங்கிரஸ் டெல்லி முதல் திமாபூர் வரை வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறது.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாகாலாந்தை வழிநடத்த அமைதி, முன்னேற்றம், செழிப்பு ஆகிய மூன்று மந்திரங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் விளைவாக மத்திய அரசிடமிருந்து அனுப்பப்படும் பணம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது” என்றார்.