திருமணத்திற்கு முந்தைய தினம் திடீர் ‘அட்மிட்’மருத்துவமனை படுக்கையில் மணமகளுக்கு தாலி கட்டிய வாலிபர்: உறவினர்கள், டாக்டர்கள் வாழ்த்து

திருமலை: திருமணத்திற்கு முந்தைய தினம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணப்பெண்ணுக்கு நிச்சயித்தபடி மணமகன் தாலி கட்டினார். புதுமண தம்பதியினருக்கு உறவினர்கள், டாக்டர்கள் உள்பட  பலர் வாழ்த்து தெரிவித்தனர். தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டம் பஸ்வராஜுபல்லே கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (28). இவருக்கும் மஞ்சிரியாலா மாவட்டம் சென்னூரை சேர்ந்த ஷைலஜா (22) என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு  நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்படி இவர்களுக்கு நேற்று திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மணமகள் ஷைலஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மஞ்சரியாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு வயிற்றில் சிறிய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என தெரிவித்தனர். மேலும் ஒருவாரம் ஓய்வு தேவை எனவும் கூறியுள்ளனர். திருமணம் நடைபெறவேண்டிய நிலையில் மணமகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் இருவீட்டாரும் வேதனையடைந்தனர். அதேவேளையில் திருமணத்திற்காக இருவீட்டிலும் உறவினர்கள் குவிய தொடங்கினர். இதனால் திருமணத்தை குறித்த நாளில் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு மணமகளுக்கு அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து நேற்று காலை குறித்த நேரத்தில் மருத்துவமனையிலேயே திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை மணமகன் உட்பட அனைத்து உறவினர்களும் ஏற்றுக்கொண்டனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவித்தனர். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து மருத்துவமனைக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்த மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். இதையடுத்து இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். அப்போது அங்கிருந்த உறவினர்கள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் புதுமண தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் திருமண மண்டபத்தில் அனைத்து உறவினர்களுக்கும் விருந்து பரிமாறப்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.