திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கை வாபஸ் பெறக்கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரித்து 6 மாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரும்பாவூர் நீதிமன்றத்திற்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பிரபல நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கொச்சியிலுள்ள வீட்டிலிருந்து 2 ஜோடி யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றை வருமானவரித் துறை அதிகாரிகள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வனத்துறை நடத்திய விசாரணையில் யானைத் தந்தங்களை வைத்திருப்பதற்கு மோகன்லாலிடம் முறையான லைசன்ஸ் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மோகன்லாலுக்கு யானைத் தந்தங்களை வைத்திருப்பதற்கான அனுமதியை கேரள அரசு வழங்கியது. அதை சுட்டிக்காட்டி மோகன்லாலுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறக்கோரி கேரள அரசு சார்பில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் வழக்கை வாபஸ் பெறக்கூடாது என்று கூறி 2 பேர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதை பரிசீலித்த நீதிமன்றம், மோகன்லாலுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற மறுத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், பெரும்பாவூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, மோகன்லால் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்து 6 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.