அதானி குழுமத்தில் முதலீடு… சரிவைச் சந்தித்த எல்.ஐ.சி.! என்ன நடந்தது?

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமம் ஆட்டம் கண்டு வருகிறது என்பது உலகறிந்த விஷயம். இந்த நிலையில், அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதானி குழுமம் மோசடி செய்திருப்பதாக, ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு அக்குழும பங்குகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதானி குழும பங்குகள் மட்டுமல்லாது, இந்திய பங்குச் சந்தையும் சரிவைச் சந்தித்து வருகிறது.
image
இந்த நிலையில், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு மதிப்பானது சரிந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கணக்கின்படி, ரூ.83,000 கோடியாக இருந்த முதலீடு, தற்போது நேற்றைய தேதிப்படி ரூ.33,000 கோடியாகச் சரிந்துள்ளது. அதாவது, ஜனவரி 24ஆம் தேதி அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது. ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு எல்.ஐ.சி. பங்கு முதலீடும் சரிவைச் சந்தித்துள்ளது.
அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது. இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேநேரத்தில், அதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குகளை வாங்கியிருக்கும் எல்ஐசி நிறுவனம், ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகு எந்த விதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று சொல்லப்படுகிறது.
image
அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் எல்.ஐ.சி., பிப்ரவரி மாத கணக்குப்படி 11 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது, ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. அதுபோல், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் எல்.ஐ.சி., கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும், அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் ரூ.25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.