சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த நபிஷ் ஃபாத்திமாவுக்குள் ஐ.ஏ.எஸ் கனவை விதைத்தவர் அவரின் தந்தை முகமது இஸ்மாயில். இவர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஒட்டியம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மகன் முகமது உமரையும், ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் நஸ்ரின் ஃபாத்திமாவையும் விட்டுவிட்டு, தனது பகுதியில் 4 நாள்களாக தண்ணீர் வராதது குறித்து கவுன்சிலரை சந்தித்து, பகுதிவாசிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்குவதை உறுதிசெய்திருக்கிறார். பின்னர், தன்னுடடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் முகமது இஸ்மாயில்.
முகமது இஸ்மாயில், வீட்டுக்கு அருகேயுள்ள நேதாஜி நகர் மெயின் ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, 2 உயரழுத்த மின் கம்பிகள் அறுந்து அவரின் தோள்பட்டையில் விழுந்திருக்கின்றன. இதில் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இஸ்மாயில் சில நொடிகளில் பலியானார்.
இஸ்மாயிலின் இழப்பால் நிர்கதியான நிலையில், பரிதவித்துக் கொண்டிருக்கும் அவர் குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பேசினோம். கலங்கிய கண்களுடன் நம்மிடம் துயரத்தைப் பகிர்ந்த இஸ்மாயிலின் சகோதரர், “ஊருக்கு ஒண்ணுன்னா முதல் ஆளா போய் நிப்பார் சார் எங்க அண்ணன். இப்படி நடப்பது இது முதன் முறை இல்ல. ஒரு வருஷம் முன்ன இதே இடத்துல மின் கம்பி அறுந்து விழுந்து, 4 மாடுங்க செத்துப் போச்சு. அதப் பத்தியும் எங்க அண்ணன் இஸ்மாயில்தான் மின் வாரியத்துல புகார் கொடுத்தார். இன்னைக்கு அவரே இல்லாம போயிட்டாரே… அவர் சாவுக்கு முழுக்க முழுக்க மின் வாரியத்தோட அலட்சியம்தான் சார் காரணம்” என்றார். 3 வயதில் தந்தையை இழந்தபோது, தந்தையாக இருந்து தன்னை ஆளாக்கிய அண்ணனை இழந்த பரிதவிப்பும், பதற்றமும் அவரின் முகத்திலும் பேச்சிலும் எதிரொலித்தது.
தொடர்ந்து பேசியவர், “இஸ்மாயில் இறந்ததும் மின் வாரியத்தோட அலட்சியத்தக் கண்டிச்சு இந்தப் பகுதி மக்கள் எல்லாரும் சேர்ந்து சாலைமறியல் செஞ்சோம். அதிகாரிகள் வாக்குறுதிகள் கொடுத்ததால போராட்டத்தைக் கைவிட்டோம். சம்பவம் நடந்த அன்னைக்கு காவல்துறை தரப்பிலிருந்து கூடுதல் ஆணையர் ரியாசுதீன் சார், ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தாங்க.
மின் வாரியம் தரப்புல தாம்பரம் பகுதி உதவி பொறியாளர் அசோகன் சார் 5 லட்சம் ரூபா கொடுத்திருக்காங்க. எங்க அண்ணனுக்கு 3 பிள்ளைகள் இருக்காங்க. அவர் தள்ளுவண்டில இறைச்சி கடை நடத்திட்டு வந்தாரு. தெனம் 500 ரூபா முதல் 700 ரூபா வரை சம்பாதிப்பாரு. இனி பிள்ளைகளோட எதிர்காலத்துக்கும் கல்விக்கும் இந்த 6 லட்சம் ரூபா போதுமா சார்… எங்க தரப்புல 20 லட்சம் ரூபா பணமும், அண்ணிக்கு அரசு வேலையும் கேட்டோம். இந்த ரெண்டு கோரிக்கைக்கும் இதுவரை அதிகாரிகள் தரப்பிலிருந்து தெளிவான பதில் கிடைக்கல. எங்களுக்கு பெரும்பாக்கம் குடியிருப்புல ஒரு வீடு ஒதுக்குறோம்னு சொல்லிருக்காங்க. தயவு செய்து அத முகப்பேர்’ல ஒதுக்க வேண்டும். நான் முகப்பேர் பகுதியில ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன். என்னோட குழந்தைகளோட அண்ணியையும், அவங்க குழந்தைகளையும் பார்த்துக்க எனக்கு உதவியாக இருக்கும். அரசுக்கு என்னோட தாழ்மையான கோரிக்கை இது” என்றார்.
தன் தந்தையை மின்சாரத்துக்கு பலி கொடுத்துவிட்டு கலங்கி நின்ற நபிஷ் ஃபாத்திமாவிடம் பேசினோம். “எங்க அப்பாவ நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுறேன் சார். அவர் செத்தப் பிறகும்கூட ஊருக்கு நல்லது செஞ்சிட்டுதான் போயிருக்காரு. இதோ எங்க பகுதில இருக்குற பழுதான மின்கம்பிகளை எல்லாம் அவசர அவசரமா இன்னைக்கு புதுசா மாத்திக்கிட்டு இருக்காங்க. இதை எங்க அப்பா புகார் கொடுத்தப்பவே செஞ்சிருந்தா அவர் செத்துருக்க மாட்டாரே. அதிகாரிகள் நியாயமா செய்ய வேண்டிய வேலையை செய்யறதுக்குக்கூட, ஒருத்தர் சாகணுமா… அவர் என்ன ஒரு பையன் மாதிரிதான் வளர்த்தாரு. அவர மாதிரி ஊருக்கு நல்லது செய்யணும்கிறதுக்காகவே, `நீ படிச்சு ஐ.ஏ.எஸ் ஆகணும் பாப்பா, அதிகாரத்துக்கு வந்தாதான் உன்னால நம்மள மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு உதவ முடியும்’னு சொல்லிகிட்டே இருப்பாரு.
அவரோட கனவை நான் நிச்சயமா நிறைவேத்துவேன். தம்பி தங்கச்சியப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு. அம்மா வீட்டில இருந்தே டெய்லரிங் வேலை பார்ப்பாங்க. அவங்கள என்னால கஷ்டப்படுத்த முடியாது. என்னோட கல்விச் செலவுக்கு யாராவது உதவுனா போதும்… எங்கப்பா சொன்னா மாதிரியே படிச்சு ஐ.ஏ.எஸ் ஆகி என் குடும்பத்தை மேலே கொண்டு வந்திடுவேன்” என்றார் நம்பிக்கை பொங்க.
தங்கள் அக்கா பேசிக் கொண்டிருப்பது என்னவென்றே புரியாமல் உமரும், நஸ்ரினும் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். உயிரிழந்த இஸ்மாயிலின் குடும்பத்தினர் 5,000 ரூபாய் வாடகை வீட்டிலேயே வசித்து வருகின்றனர். அம்மாவின் தையல் இயந்திரத்தைத் தவிர, வீட்டில் டி.வி, வாஷிங் மெஷின் என எந்தப் பொருள்களும் இல்லை.
வருமானம் ஈட்டும் குடும்பத்தின் தலைவரை இழந்து நிற்கும் குடும்பத்தின் இந்த நிலைமைக்கு, அரசு இயந்திரத்தின் அலட்சியமே காரணம் என்று சொன்னாலும் தகும். இனியாவது இது போன்ற விபத்துகள் நடக்காத வகையில், மின் வாரியம் செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.