இந்தியாவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பின் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடதக்கது. சிபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி திட்டத்தில் இருந்து மட்டுமே நீட் தேர்விற்கு பெரும்பாலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இந்தநிலையில் திடீரென நீட் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டதால், அதுவரை மாநில பாடத்தில் பயின்ற மாணவர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளானர். இதனால் பல மாணவர்களின் மருத்துவ கனவு தடைபட்டது. மேலும் தமிழகத்தில் அனிதா உள்ளிட்ட பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எனவே தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் திமுக ஆட்சி வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது.
அதைத் தொடர்ந்து திமுக அரசு தற்போது பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கடந்த 19ம் தேதி நீட் தேர்வை தடை செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்தநிலையில் நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு திரும்ப பெற்றதாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து நீட் விவகாரத்தில் திமுக பின்வாங்கியதாக சமூக வலைதளங்களில் பரப்பட்டது.
ஆனால் இது குறித்து திமுக ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவை இயற்றி ஆளுநர் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளது. இதனிடையே, நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வரும் திமுக அரசு, புதிதாக சூட் மனு ஒன்றை கடந்த 19ஆம் தேதி தாக்கல் செய்துள்ளது.
அதிமுக அரசின் ரிட் மனுவுக்கும், திமுக அரசின் சூட் மனுவுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. அதிமுக அரசின் ரிட் மனு என்பது விலக்கு வழங்க உத்தரவிட கோரிய பொதுநல மனு. ஆனால் திமுக அரசு தாக்கல் செய்த சூட் மனு என்பது கூட்டாட்சிக்கும், மாநில உரிமைக்கும் எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ள மனு.
ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் தற்போது எழுச்சியோடு இருக்கிறார்கள் – எடப்பாடி
நீட் தேர்வு அரசியல் சாசனப் பிரிவு 14, 21யை மீறியுள்ளது. எனவே, ஒன்றிய அரசின் நீட் தேர்வு சட்டங்களை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளிக்க வேண்டும் என திமுக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. அந்த திமுக அரசின் சூட் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்தநிலையில் தான் தள்ளுபடி செய்யப்படும் நிலையில், பலவீனமாக இருந்த அதிமுக அரசின் ரிட் மனுவை வாபஸ் பெறுவதாக திமுக அரசு கோரியது. அதற்கு நீதிபதி அஜய் ரஸ்தோகி அனுமதி அளித்துள்ளார்.
நீட் தேர்வு மாணவர்களை பாதிக்கிறது என்ற உண்மையை உணராதவர்கள், அது தொடர்பான வழக்கு பற்றியும் உண்மையை மறைத்து அவதூறுகளையும் பொய்யையும் பரப்புகின்றனர். நீட் தேர்வை எதிர்ப்பதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பின்வாங்கவில்லை. தொடர்ந்து போராடுகிறது என்பதே உண்மை’’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.