புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்திருக்கிறது. கடந்த 2013 ஜனவரியில் இங்கு புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது. புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டவுடன் 2013 ஜனவரி முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால், அந்த விமான சேவையும் முன்னறிவிப்பு ஏதுமின்றி 2015 அக்டோபரில் நிறுத்தப்பட்டது. மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டமான உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூருவுக்குத் தற்போது விமான சேவை இருக்கிறது.
இந்த நிலையில் விரைவில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை தொடங்கப்படவிருக்கிறது. அதற்கான சிறிய ரக விமானம் புதுச்சேரி வந்தது. அந்த விமானத்தை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உள்ளிட்டோர் பார்த்தனர். இது தொடர்பாக இலகுரக விமான சேவையைத் தொடங்கும் தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ சதீஷ்குமார், “சிறிய நகரங்களை இணைக்க மத்திய அரசின் உதான் திட்டத்தில் 19 இருக்கைகள் கொண்ட விமான சேவையை தொடங்கவிருக்கிறோம். அதைக் காட்சிப்படுத்த புதுச்சேரி விமான நிலையத்துக்கு எடுத்து வந்தோம். செக் குடியரசில் இந்த விமானத்தை வாங்கினோம். இந்த விமானங்களை தரையிறக்க இறங்க 600 மீட்டர் ஒடுதளம் போதுமானது. முக்கிய நகரங்களுக்கு இந்த இலகுரக விமானத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறோம். அதில் புதுச்சேரியும் ஒன்று” என்று தெரிவித்தார்.