‛வடக்கன்' படத்திற்கு இசையமைக்கும் கர்நாடக இசைகலைஞர் எஸ்ஜே ஜனனி

பிரபல கர்நாடக இசைக்கலைஞரான எஸ்ஜே ஜனனி ‛வடக்கன்' என்ற படத்திற்கு இசையமைக்கிறார். சிறு வயதில் இருந்தே இசைப்பயிற்சி பெற்று இளம் வயதிலேயே மேடை கச்சேரிகளில் பாடியவர் எஸ்ஜே ஜனனி. கர்நாடக இசை, இந்துஸ்தானி, உள்ளிட்ட இசைகளில் இவர் கற்றுத்தேர்ந்தவர்.

பாடகி, இசை தொகுப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளில் பாடி உள்ளார். 'புதிய உலகம் மலரட்டுமே' என்ற பாடலுக்கு 'உலக அமைதிப் பாடல்' என்ற விருதை பெற்றுள்ளார். மேலும் மத்திய அரசின் தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது போன்ற ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். பக்தி, பாப் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட ஆல்பங்களுக்கும் இசைப்பணி செய்துள்ளார். மறைந்த கர்நாடக இசை கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவி இவர் ஆவார். ஏற்கனவே பிரபா என்ற படத்திற்கு இசையமைத்தார். இப்போது இரண்டாவதாக வடக்கன் படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கி உள்ளார்.

'எம்டன் மகன்', 'வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல' உள்ளிட்ட படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ‛வடக்கன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிக்கின்றனர். ரமேஷ் வைத்யா இப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார். டிஸ்கவரி சினிமாஸ் வேடியப்பன் தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.