சேலம்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சேலம் மாநகர் மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணனின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியது: ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் திமுக ஒரு புதிய ஃபார்முலாவை கையாண்டுள்ளது. அதுதான் திராவிட மாடல் என்று நினைக்கும் அளவுக்கு வாக்காளர்களை நாள் முழுவதும் அடைத்து வைத்து மாலை நேரத்தில் ரூ.500 ரூபாய் பணம் கொடுத்து அவலமான நிலை ஏற்படுத்தியுள்ளது.
களத்தில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் திராவிட மாடல் என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு தங்கள் திட்டங்களையும் கொள்கைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து தைரியமாக வாக்கு சேகரித்தால் ஆரோக்கியமான விஷயமாக இருக்கும். ஆனால், எப்போதும் இல்லாத அளவில் திருமங்கலம், கும்மிடிப்பூண்டி பகுதியில் நடைபெற்ற ஃபார்முலாவை விட தற்போது திராவிட மடல் ஃபார்முலாவை நடைமுறைப்படுத்தி, மக்களை அடைத்தது வைத்துள்ளனர்.
திமுகவின் இந்த முறைகேட்டை தேர்தல் ஆணையத்தில் முறையாக முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. காவல்துறை நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை இணைந்து உடனடியாக இடைத்தேர்தலில் தடுத்து நிறுத்த வேண்டும்.
திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை மக்களுக்கு ஏற்கெனவே சொன்ன எதையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.