இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களை ஈர்க்க புதிய யுக்தி: பள்ளி நிர்வாகத்திற்கு கல்வி அலுவலர்கள் பாராட்டு

ராமநாதபுரம்: இல்லம் தேடிக்கல்வி திட்ட கற்பித்தல் மையங்களில் மாணவ, மாணவிகளை ஈர்க்கும் வகையில்  புதிய யுக்தியை செயல்படுத்தி வரும் ஓம்சக்தி நகர் ஆரம்ப பள்ளி நிர்வாகத்தை கல்வி அலுவலர்கள் பாராட்டினர். கொரோனா பேரிடர் கால பொது முடக்காததால் ஏற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல்  இடைவெளி, இழப்புகளை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை  2021 அக்.27 ல் தொடங்கி வைத்தார். முன்னோடி திட்டமாக 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. இதன்பின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022 ஜன.3ம் தேதி தொடங்கப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் 11 வட்டாரங்களிலுள்ள 3,692 மையங்களில் 66 ஆயிரத்து 512 மாணவ, மாணவிகளுக்கு
மாலைநேர கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மண்டபம் ஒன்றியம் ஓம் சக்தி நகர் ஆரம்பப் பள்ளிக்கு உட்பட்ட எல்லைக்குள் 4 இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. திட்டம் தொடங்கிய கால கட்டத்தில் தன்னார்வலர்களின் வீடுகளில் மையங்கள் செயல்பட்டன. இதனால் தன்னார்வலர்களின் வீடுகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய துவங்கியது.

இதை போக்க பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜ், பள்ளி மேலாண்  குழுவினரின் உதவியுடன் பள்ளி நேரத்திற்கு பின், பள்ளி வளாகத்தில் 4  மையங்களை  செயல்பட ஒப்புதல் அளித்தார். மாணவ, மாணவிகளின் நலன் கருதி கொண்டைக்கடலை, பாசிப்பயறு, பட்டாணி, தட்டை  பயறு, நிலக்கடலை, சோளம்,  மரவள்ளி, சக்கரை வள்ளி கிழங்கு என மாலை நேர சிற்றுண்டியை  தனது சொந்த செலவில் வழங்க முன்வந்த தலைமை ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜ் கடந்த 2 மாதங்களாக வழங்கி வருகிறார்.  மாணவர்களின் கல்வி நலனில் சிறந்த அக்கறை காட்டி வரும் ராபர்ட் ஜெயராஜின் இந்த பணிக்கு குழந்தைகளின் பெற்றோரும் முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

தங்கள் குழந்தைகளின் பிறந்த நாளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி சிறப்பிக்கின்றனர். இந்த நற்செயல்களால் மாணவர்களின் வருகை தற்போது அதிகரித்து மாணவர்கள் கல்வித்தரம் உயர்ந்து, தங்களுடைய வீட்டுப் பாடங்களை பள்ளியிலேயே முடித்து செல்கின்றனர். இல்லம் தேடிக்கல்வி 4 மையங்களின் தன்னார்வலர்கள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். இம்மையங்களில் 106 மாணவர்கள் பயனடைந்து  வருகின்றனர்.

மண்டபம் ஒன்றியத்தில் செயல்படும் 696 மையங்களில் முன்மாதிரியாக செயல்படும் ஓம்சக்தி நகர் ஆரம்பப்பள்ளி  தலைமை ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜ், ஆசிரியை கிருஷ்ணவேணி, தன்னார்வலர்கள் லட்சுமி, காயத்ரி, அழகேஸ்வரி, பிரியா, பள்ளி மேலாண் குழு தலைவர் ஐஸ்வர்யா ராய், துணைத்தலைவர் மம்தா பானார்ஜி ஆகியோரை, மண்டபம் வட்டார கல்வி அலுவலர் சூசை, ராமநாதபுரம் வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் லியோன், மண்டபம் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ததேயு ராஜ், திருப்புல்லாணி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ஆகியோர் பாராட்டினர். மாவட்டத்தில் 11 வட்டாரங்களிலும் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களில் மாலை நேர சிற்றுண்டி வழங்க ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழு, பெற்றோர் முன் வர வேண்டும் என கல்வி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.