ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் தந்தை மற்றும் மகளை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய நபருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம், கோதமிகம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய தயானந்த அபேகுணவர்த்தன என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரின் மனைவி இன்னொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட தயானந்த, அதற்கு உதவி செய்வதாக சந்தேகப்பட்ட நபர் மீதும் அவரது மகள் மீதும் வீதியில் செல்லும் போது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார். இச்சம்பவம் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.
மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு
சம்பவத்துக்கு இலக்கான தகப்பன் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது மகளான பத்தொன்பது வயது யுவதி மட்டும் கடுமையாக காயமடைந்த நிலையில் கடும் போராட்டத்தின் பின் உயிர் பிழைத்திருந்தார்.
அதனையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு தயானந்தவுக்கு எதிராக ஹம்பாந்தோட்டை மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதினாறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட யுவதிக்கு ஐம்பதினாயிரம் ரூபா நட்டஈடு வழங்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.