மக்களுக்கு சேவை செய்ய, மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக வாங்கும் அரசு ஊழியர்கள், தங்களுடைய சம்பளத்தை மீறி அப்பாவி பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவது காலம் காலமாக அரங்கேறி வருகிறது.
“லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்”, லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும்” போன்ற நேர்மையின் வீர வசனங்கள் சொல்லப்பட்டாலும், எழுதி வைக்கப்பட்டாலும், தமிழகத்தின் பல்வேறு அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரி ஒருவர் ஹைடெக் முறையை பின்பற்றி உள்ளார். தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் வணிக உரிம கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அப்படியாக மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் ஆண்டுதோறும் வணிக உரிமம் புதுப்பிக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படும் பணியில் வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் செய்து வந்தனர்.
அப்போது செல்போன் கடைக்காரர் ஒருவரிடம் இருந்து, சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் ‘கூகுள் பே’ மூலம் 2000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து தாம்பரம் ஆணையரிடம் சம்பந்தப்பட்ட நபர் புகார் அளிக்கவே, சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அவரின் உதவியாளர் சுப்பையாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பணத்தை கொடுக்கும்போது, ரசாயனம் தடவி, கைரேகையுடன் கையும் களவுமாக பிடிப்பது வழக்கம். லஞ்ச ஒழிப்பு போலீசார் டிமிக்கு கொடுக்கும் வகையில் கூகுள் பே மூலம் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்களோ!!!! என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் எழுந்துள்ளது.