பெஷாவர்:பாகிஸ்தானில், தெஹ்ரீக் – இ – தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பாகிஸ்தான் தலிபான் என்றழைக்கப்படும் தெஹ்ரீக் – இ – தலிபான் பயங்கரவாத அமைப்பினர், தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பினர், கடந்த மாதம், பெஷாவர் மசூதியில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், ௧௦௦ பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மர்வாத் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அவர்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், தெஹ்ரீக் – இ – தலிபான் பயங்கரவாதிகள் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement