பணிக்கு அனுப்பிய பெண்ணை துபாயில் தவிக்க விட்டதாக சர்ச்சையில் சிக்கிய நவாசுதீன் சித்திக்

பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். பேட்ட படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்தவர் இவர்தான். இவரும் இவரது மனைவி ஆலியாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்குள் சொத்து குறித்த ஒரு வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் துபாயில் படிக்கும் தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக தன் தரப்பிலிருந்து சப்னா என்கிற இளம் பெண்ணை வேலைக்காக அனுப்பி வைத்தார் நவாசுதீன் சித்திக். ஆனால் தனக்கு சம்பளம் எதுவும் வழங்காமல் துபாயில் தன்னை அனாதையாக நவாசுதீன் சித்திக் தவிக்க விட்டு உள்ளார் என்று சமீபத்தில் ஒரு வீடியோவில் பணிப்பெண் சப்னா பேசியிருந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நவாசுதீன் சித்திக் தரப்பிலிருந்து அந்த பெண்ணை இந்தியாவிற்கு திரும்பி அழைப்பதற்காக டிக்கெட் எடுத்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் அந்த பெண்ணிற்கு உணவு மற்றும் வாடகை கார் ஆகியவற்றிற்கான செலவு தொகையும் அங்கே வேலை பார்த்ததற்கான சம்பளமும் இன்னும் வழங்கப்படவில்லை என்று சப்னாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சை பற்றி நவாசுதீன் சித்திக் அளித்துள்ள விளக்கத்தில், “இந்த விவகாரங்கள் குறித்து எதையும் நான் பேச விரும்பவில்லை. எனது குழந்தைகளின் படிப்பு தான் முக்கியம். இந்த நிகழ்வுகளால் கடந்த ஒரு மாதமாக அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. எனது விருப்பமெல்லாம் எனது குழந்தைகள் நல்லபடியாக பள்ளிக்கு சென்று வர வேண்டும் என்பதுதான்” என்று மட்டும் பொத்தாம் பொதுவாக கூறியுள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.