துரைப்பாக்கம்: மகனுக்கு பெண் பார்த்துவிட்டு திரும்பி வந்தபோது, சென்டர் மீடியனில் கார் மோதி கவிழ்ந்து விபத்துள்ளானதில் தந்தை பரிதாபமாக பலியானார். மேலும், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை தரமணி பகுதியை சேர்ந்தவர் கோதண்டன் (70). இவரது மனைவி பொன்னம்மாள் (65). இவர்களது மகன்கள் சிவசங்கர், வினித். நேற்று முன்தினம் கோதண்டன், மனைவி, மகன்கள் மற்றும் தனது தங்கை ஆகியோருடன் திருத்துறைப்பூண்டிக்கு காரில் சென்று, மகன் வினித்திற்கு பெண் பார்த்துவிட்டு, நள்ளிரவு ராஜிவ் காந்தி சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சிவசங்கர் காரை ஓட்டி வந்தார்.
இந்நிலையில், பெருங்குடி டோல்கேட் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் மயங்கிய நிலையில் கிடந்த கோதண்டன் ஆகியோரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, கோதண்டனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், படுகாயமடைந்த பொன்னம்மாள், சிவசங்கர், வினித், கோதண்டனின் தங்கை ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மருத்துவமனை சார்பில், கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோதண்டனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.