நியூயார்க்-ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உக்ரைனுக்கு ஆதரவான தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.
கடும் பொருட்சேதம், உயிரிழப்புகள் நிகழ்ந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை ஓயவில்லை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன; ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உக்ரைனும், அதன் ஆதரவு நாடுகளும் ஒரு தீர்மானத்தை நேற்று தாக்கல் செய்தன.
ஐ.நா., ஒப்பந்தத்தின்படி உக்ரைனில் விரிவான, நியாயமான, நீடித்த அமைதிக்கான சூழலை விரைவில் உருவாக்குவது தொடர்பான இந்தத் தீர்மானத்தின் மீது விவாதமும் நடந்தது.
மேலும், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேறுவது குறித்தும் இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 141 நாடுகள் ஓட்டு அளித்தன; ஏழு நாடுகள் எதிர்த்து ஓட்டளித்தன.
இந்தியா, சீனா உட்பட 32 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இதையடுத்து தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் ருச்சிரா கம்போஜ் கூறியதாவது:
இந்த விஷயத்தில் நமக்கு நாமே சில பொருத்தமான கேள்விகளை கேட்க வேண்டும்.
எந்த ஒரு விஷயத்திலும் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வை நாம் காண வேண்டும்.
இரு தரப்பையும் உள்ளடக்காத, எந்த ஒரு தீர்மானம் அல்லது செயல் திட்டமும் நம்பகமான அல்லது உறுதியான தீர்வை ஏற்படுத்தாது.
உக்ரைனின் தற்போதைய நிலை இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. இந்த போரால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுஉள்ளனர்.
கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
பேச்சுவார்த்தை மற்றும் துாதரக ரீதியிலான நடவடிக்கைள் மட்டுமே இதற்கு சாத்தியமான ஒரே வழி என நாங்கள் நம்புகிறோம். இதன் காரணமாகவே ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்