சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போரின் ஓராண்டு நிறைவு
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தன் நாட்டு வீரர்களுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாற்றினார்.
அதில் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி நாட்டிற்காக நம்மில் லட்சக்கணக்கானோர் துணிந்து நின்று போராட முடிவு செய்தோம். இதனால் இந்த 2023ம் ஆண்டு நமக்கு வெற்றி ஆண்டாக இருக்கும் என்று ஜெலென்ஸ்கி சூளுரைத்தார்.
வேதனை, துயரம், நம்பிக்கை, ஒற்றுமை ஆகியவை நிரம்பிய ஆண்டில் பல உக்ரைனியர்கள் தங்களை கடந்த ஆண்டு நிரூபித்து காட்டியுள்ளனர்.
அதைப்போல இந்த 2023ம் ஆண்டிலும் நம்மை யாராலும் வெற்றி கொள்ள முடியாது என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-உடன் சந்திப்பு
இதற்கிடையில் பெரிய தருணம் ஒன்றில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-சீனா இடையே வலுவான நட்புறவு பாராட்டப்பட்டு வரும் நிலையில், “நான் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளேன், இது நமது நாடுகளுக்கும், உலகின் பாதுகாப்பிற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
GETTY IMAGES
ஆனால் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அத்தகைய சந்திப்பு எப்போது நடைபெறும் என்று தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் அமைதிக்கான சீனாவின் ஆர்வம் “மோசமானதல்ல” என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.