ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) மாலையுடன் நிறைவடைகிறது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நடந்து சென்று வாக்காளர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக வாக்குகள் சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் கூறியது மட்டுமல்லாமல், சொல்லாத திட்டங்களையும் திமுக செயல்படுத்துகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா ஈரோடு கிழக்கு தொகுதி வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றினார். இப்போது அவரது தந்தை அந்த இடத்தில் உங்களிடம் வாக்குகள் கேட்டு வந்திருக்கிறார். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுகவின் அடிப்படையே ஈரோடு தான். தேர்தல் அறிக்கையில் திமுக கூறிய மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அளித்தார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் என முதலைமச்சர் கூறியது தேர்தல் நடத்தை விதிமீறல் என அதிமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவரிடம் புகார் அளித்த அதிமுகவின் இன்பதுரை, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.