டெல்லி : இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ்-க்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு ஜி 20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ்இன்று 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜெர்மனியின் மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அளவிலான வர்த்தக குழுவினரும் அவருடன் வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ்-க்கு குடியரசு தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமருக்கு ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மோடியும் ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸும் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த சந்திப்பில் இரு தரப்பு மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி மோடியும் ஜெர்மனி பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினர். இதில் பிரதமர் மோடி பேசும்போது, ‘ஐரோப்பிய பகுதியில் மிக பெரிய வர்த்தக நட்புறவு நாடாக ஜெர்மனி உள்ளதுடன், இந்தியாவில் முதலீடு செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. உக்ரைனில் அமைதியான சூழல் திரும்ப ஜி-10 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும்,’என்றார்.