புதுடில்லி: ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு எதிராக முந்தைய அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த, ‘ரிட்’ மனுவை தமிழக அரசு நேற்று திரும்பப் பெற்றது.
எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர, ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில், 2017 – 18ல் அறிவித்தது. இதை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முந்தைய ரிட் மனுவை திரும்ப பெற அனுமதி அளிக்கும்படி, தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
முன்னதாக, ‘மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம்’ என கடந்த 2017-ல் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து தாக்கலான பல்வேறு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை தமிழக அரசு அளித்தது.
ஆனால், அந்த நடவடிக்கைகளில் எந்த முடிவும் எட்டாத நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதா, தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது.
எனவே, மீண்டும் சட்டசபையில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் பெற கவர்னர் வாயிலாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மீதும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதேபோல் நீட் கட்டாயம் என்ற மருத்துவ கவுன்சில் விதியை எதிர்த்து தமிழக அரசால் தொடரப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
தமிழக அரசு தற்போது புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்தது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனுவை தமிழக அரசு நேற்று திரும்பப் பெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement