பாட்னா: “பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், பாஜக கூட்டணியில் இணைய இனி வாய்ப்பே இல்லை” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிஹாரின் லவுரியா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ”பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தர்ப்பவாதியாக மாறிவிட்டார். இனி பாஜகவின் கதவுகள் அவருக்காக ஒருபோதும் திறக்கப்பட மாட்டாது. ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி மிகவும் பாதகமான கூட்டணி. எண்ணெயும் தண்ணீரும் எப்படி ஒன்று சேராதோ அதுபோலத்தான் இந்த இரு கட்சிகளின் கூட்டணி.
பிரதமராக வேண்டும் என நிதிஷ் குமார் கனவு காண்கிறார். அவரது இந்த கனவால், பிஹார் சீர்குலைந்திருக்கிறது. பிரதமர் பதவி 2024-லும் காலியாகாது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார். பிஹாரில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. குற்றங்கள் அதன் உச்சத்திற்கு சென்றுவிட்டன. பிஹாரில் கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தங்களுக்கான பாதுகாப்பான இடமாக பிஹாரை மாற்ற முயன்றன. நிதிஷ் குமார் இதனை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அந்த அமைப்பையே தடை செய்துவிட்டார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் வைத்த கூட்டணி காரணமாக பிஹார் முழுவதும் பற்றி எரிகிறது. அதனை அணைக்கும் துணிவு நிதிஷ் குமாருக்கு இல்லை.
பிஹாரின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இருப்பதால், தற்போது மாநிலத்தில் பாதி காட்டாட்சி வந்துவிட்டது. தேஜஸ்வி யாதவ் முதல்வராக ஆகிவிட்டால் முழு காட்டாட்சி வந்துவிடும். அவரை முதல்வராக்கப் போவதாக நிதிஷ் குமார் கூறி இருக்கிறார். ஆனால், அதற்கான தேதியை அவர் கூற வேண்டும்” என்று அமித் ஷா பேசினார்.